தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் இன்று (டிசம்பர் 23) நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக இருந்த அருண் குமார் மிஸ்ரா கடந்த ஜூன் 1-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதனையடுத்து பொறுப்பு தலைவராக, விஜய பாரதி சயானி செயல்பட்டு வந்தார்.
புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி பிரதமர் மோடி, நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் முடிவில், தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை தேர்வு செய்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தனர். தேடுதல் குழுவின் பரிந்துரையை ஏற்று தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக வி.ராமசுப்பிரமணியனை குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.
1958-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி மன்னார்குடியில் ராமசுப்பிரமணியன் பிறந்தார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார்.
23 ஆண்டுகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய ராமசுப்பிரமணியன், 2006-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.
இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய பின்னர் ஓய்வு பெற்றார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை இவர் விசாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேசிய கல்வி கொள்கையால் நாடு முன்னேறியுள்ளது : வேலைவாய்ப்பு திருவிழாவில் மோடி பேச்சு!