கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குறைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அலுவலகத்தில் வழங்கிக் கொண்டிருந்தனர். நுழைவாயில் வழியாக வந்தவர்களை போலீஸார் சோதனையிட்டு உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தனர்.
மதியம் ஒரு மணியளவில் நுழைவாயிலின் முன்பகுதியில் சற்று ஓய்வாக பாேலீஸார் நின்றிருந்தனர்.
அப்போது அறச்சலூரை அடுத்த வடுகப்பட்டி ஜெ. ஜெ. நகரைச் சேர்ந்த குமார் (36) என்பவர் தனது குடும்பத்துடன் உள்ளே நுழைந்து, தனது பைக்கில் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தன்மீது ஊற்றிக் கொண்டு பற்றவைக்க முற்பட்டார்.
இதைக் கண்டதும் அங்குப் பணியிலிருந்த போலீஸார், அங்கு வைக்கப்பட்டிருந்த குடிநீர் கேனை எடுத்து அவர்மீது ஊற்றி, கையில் மீதமிருந்த பெட்ரோலைப் பறித்துக் காெண்டனர்.
இதைக் கண்ட குமாரின் மனைவி மங்கம்மாள் (31), மகன் சபரி (15), மகள் மணிமேகலை (13) ஆகியோர் கதறி அழுதனர்.
இதையடுத்து குமாரிடமும், அவர் மனைவி மங்கம்மாளிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது குமார், “வடுகப்பட்டி, ஜெ. ஜெ. நகரில் திருஷ்டி பொம்மை செய்யும் தாெழிலில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகிறோம்.
குடும்பக் கஷ்டத்துக்காக எங்கள் ஊரைச் சேர்ந்த காளியப்பன் என்பவரிடம் ரூ.50,000, மாதப்பன் என்பவரிடம் ரூ.1,00,000, படையப்பனிடம் ரூ.20,000, வன்னியர் என்பவரிடம் ரூ.80,000 என மொத்தம் ரூ.2.5 லட்சத்தை 4 ஆண்டுகளுக்கு முன்பு கடனாகப் பெற்றிருந்தேன்.
ரூ.100-க்கு ரூ.10 வீதம் வட்டி வசூலிக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும், மாதமும் என்னால் வட்டி மட்டும்தான் கட்ட முடிகிறது. அசலைக் கட்ட முடியவில்லை. வட்டி கட்டவில்லையென்றால் அபராத வட்டி என்று கூறி இரட்டை வரி வசூலிக்கின்றனர்.
இதுவரை வாங்கிய அசலைவிட ஒன்றரை மடங்குக்கு மேல் வட்டி கட்டிவிட்டேன். வட்டியும், அசலையும் கட்டாததால் எங்கள் மகனைப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலைக்கு சேர்த்து விட்டேன்.
பணம் கட்டாத காரணத்தால் என் மனைவி, மகளைத் தவறாகவும், இழிவுபடுத்தியும் பேசுகிறார்கள்.
ஏற்கெனவே, நான் குடியிருந்து வந்த வீட்டை விற்றுதான் ஒரு பகுதி கடனை அடைத்தேன். ஆனால், இவர்கள் கந்து வட்டியைவிட காெடூரமாகப் பணம் வசூலிக்கின்றனர்.
இவர்கள் யாரும் ஃபைனான்ஸ் தொழில் செய்பவர்கள் அல்ல. எங்களைப் போல திருஷ்டி பொம்மை தயார் செய்து விற்கும் தொழிலில்தான் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஆனால் அவர்கள் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இவ்வாறு நடந்து காெள்கிறார்கள். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டு எனது குடும்பத்தாரைக் காப்பாற்ற வேண்டும்” என்றார்.
இதையடுத்து அவர்களைச் சமாதானம் செய்த மக்கள் குறை தீர்க்கும் அதிகாரிகளும், போலீஸாரும் இது தொடர்பாக அறச்சலூர் போலீஸில் புகார் கொடுக்க அறிவுறுத்தினர். இந்தச் சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
ராஜ்
மிரட்டல் பேச்சு: மன்னிப்பு கேட்ட கர்னல் பாண்டியன்
கிச்சன் கீர்த்தனா: வரகு அரிசி கீரை அடை
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
