உள்ளத்தை உறையவைக்கும் சம்பவங்களில், கந்துவட்டியால் காவு வாங்கப்பட்ட ஒரு குடும்பமும் அடங்கும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கரிசல் பூமியில், இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர், தன் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாசலிலேயே தீக்குளித்தார். ஆனால், இந்த நிகழ்வு நடந்தும் கந்துவட்டிக்கு தீர்வு காணப்படவில்லை. ஆம், இன்றும் பலர் கந்து வட்டியை நம்பித்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
காரணம், அவர்களுடைய வாழ்வாதாரம். பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பல குடும்பங்கள், கந்து வட்டி வாங்கித்தான் தொழிலைச் செய்கின்றன. அதில் லாபம் வருபவர்கள் முறையாக கடனைக் கட்டுகிறார்கள். நஷ்டத்தைச் சந்திப்பவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தமிழகத்தில் கந்துவட்டிக் கொடுமையால் கடந்த ஆண்டுகளில் மட்டும் பல பேர் தற்கொலை செய்திருப்பதாகச் சொல்கிறது ஒரு புள்ளிவிபரம். அதேநேரத்தில் இதற்கான சட்டங்கள் கடுமையாக இருந்தாலும், தமிழகத்தில் கந்துவட்டிக் கொடுமைகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன.
சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் கந்துவட்டி மூலமாகவே தொழில் கோலோச்சப்படுகிறது. அதனால் அந்த மாவட்டங்களில் பலர் எண்ணற்ற துயரங்களுக்கு ஆளாகின்றனர். இது தவிர காவிரி டெல்டா மாவட்டங்களிலும் கந்துவட்டிக் கொடுமையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், இன்று விருதுநகர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு இருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால், அப்பகுதி பெரும் பரபரப்பானது. விருதுநகரைச் சேர்ந்தவர் காவலர் நாராயணசாமி. இவரது மனைவி சிவசக்தி, கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதாகத் தெரிகிறது.
இது சம்பந்தமாக புகார் கொடுக்க வருபவர்களையும், அவர்களுக்கு ஆஜராக வரும் வழக்கறிஞர்களையும் குண்டர்களை வைத்து காவலர் நாராயணசாமி தாக்குவதாகவும், அவர்கள் கொடுத்த வழக்கைப் பதியாமல், வேண்டுமென்றே அவர்கள்மீது ஏதாவது வழக்குகளைப் பதிகிறாராம். இதுகுறித்து மேலிடங்களுக்கு புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லையாம். ஆதலால் நாராயணசாமி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மகேஸ்வரி மற்றும் வழக்கறிஞர் அய்யலுசாமி ஆகியோர் இன்று கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அவர்களின் தீக்குளிப்பு முயற்சியைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். என்றாலும் அவர்கள் மகளிர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களாகிய நாம் இந்த விஷயத்தில் விழிப்போடு இருப்பது அவசியம். வருமானத்துக்கு மீறிச் செலவு செய்வதை நிறுத்த வேண்டும்; ஆடம்பரமான வாழ்க்கையைத் தவிர்க்க வேண்டும்; கூடியவரையில் அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இவற்றை ஓரளவுக்கு நாம் கடைப்பிடித்தாலே கந்துவட்டித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
- ஜெ.பிரகாஷ்