தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கந்துவட்டிக் கொடுமையால் பலரும் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தலைநகர் சென்னையிலேயே கந்துவட்டிக் கொடுமையால் தூய்மைபணியாளர்கள் பாதிக்கப்படுவதாக, கமிஷனருக்கு புகார் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்து அவர்களை மிரட்டி வரும் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட கொண்டைய்யா, ராமைய்யா ஆகியோர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக தலைநகர் சென்னை மக்கள் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேலிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகாரில், “பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் எண். 4, வார்டு எண். 34ல் தூய்மை பணியாளர்களாக பணியாற்றும் ஆதி ஆந்திரா வகுப்பைச் சார்ந்த சென்னை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த கொண்டைய்யா மற்றும் ராமைய்யா ஆகியோருக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் 100க்கு 10 என கந்து வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார்.
மேற்கண்டோரிடமிருந்து வங்கி கணக்கு புத்தகம், காசோலை புத்தகம், ATM அட்டை என அனைத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு, இவர்களுக்கு தெரியாமலேயே இவர்களின் சம்பளப் பணம் மற்றும் GPF பணம் போன்றவற்றை எடுத்திருக்கிறார்.
ரூ. 4 லட்சம் கடன் பெற்றுள்ள கொண்டையா தற்போது ரூ.14 லட்சம் தரவேண்டும் எனவும் கடந்த மாதம் கொண்டையாவின் வங்கி கணக்கிலிருந்து ரூ.3 லட்சம் GPF பணத்தை அவருக்கு தெரியாமலேயே முருகன் எடுத்துள்ளார்.
ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கடன் பெற்றுள்ள ராமைய்யா தற்போது ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் தர வேண்டும் எனவும் முருகன் கூறி வருகிறார். மேலும், நான் கூறும் தொகையை தரவில்லை என்றால் ரவுடிகளிடம் பணம் கொடுத்து உங்கள் குடும்பத்தையே ஒழித்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
மேற்கண்ட இரண்டு பேர் மட்டுமல்லாது 50-க்கும் மேற்பட்ட சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முருகன் கந்து வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார் என அறிகிறோம்.

எனவே துணை ஆணையர், கந்து வட்டிக்கு பணம் தந்து கொண்டைய்யா, ராமைய்யா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோரின் வாழ்க்கையை நிலைகுலைய வைத்திருப்பதோடு, கடும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கி, அவர்களை மிரட்டி அச்சுறுத்தியும் உள்ள கந்து வட்டிக்காரன் முருகன் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டு.
மேலும் கந்து வட்டிக்கு பணம் பெற்று சீரழிந்துள்ள சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களை காப்பாற்ற வேண்டுமெனவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தலைநகர் சென்னையில் கந்துவட்டி கொடுமை தலைதூக்காமல் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…