அரசு மருத்துவமனையில் ஓ2 மாஸ்கிற்கு பதிலாக பேப்பர் கப் பயன்படுத்தியதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் லேசான மூச்சுத் திணறல் காரணமாக சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு நெபுலைசேஷன் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது.
ஆனால் ஆக்சிஜன் மாஸ்கிற்கு பதிலாக பேப்பர் கப் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 2) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஜூலை 27 ஆம் தேதியன்று புறநோயாளிகள் பிரிவில் நேசன் என்ற 11 வயது சிறுவன் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சைக்கு வந்துள்ளார்.
அந்த சிறுவனை அருணாஜோதி என்ற மருத்துவர் பரிசோதித்து விட்டு சிறுவனுக்கு நெபுலைசேஷன் கொடுக்க சொல்லி செவிலியரிடம் கூறியுள்ளார்.
செவிலியரும் ஆக்சிஜன் மாஸ்கை எடுத்துக் கொண்டு வந்து சிறுவனிடம் போட்டுக் கொள்ளுமாறு சொல்லியுள்ளார். ஆனால் சிறுவனின் தந்தை இந்த ஓ2 மாஸ்கை நிறைய பேர் பயன்படுத்துவதால் நிறைய கிருமி தொற்று இருக்கும். எனவே இந்த மாஸ்க் வேண்டாம் என்று சொல்லியுள்ளார்.
மேலும் அவர் நான் ஒரு பேப்பர் கப் கொண்டு வந்துள்ளேன். நான் கொரோனா காலத்திலேயே அதை தான் பயன்படுத்தினேன். எனவே என் மகனுக்கு அதை போட்டு விடுகிறேன் என்று சொல்லியுள்ளார்.
செவிலியர் அதற்கு மறுப்பு தெரிவித்து, இங்கு ஓ2 மாஸ்க் தான் போட வேண்டும். அது தான் வழிமுறை என்று சொல்லியுள்ளார்.
ஆனால் சிறுவனின் தந்தை நீண்ட வாதத்திற்கு பிறகு சிறுவனுக்கு ஓ2 மாஸ்கை போட விடாமல் பேப்பர் கப்பை போட்டு விட்டுள்ளார்.
பேப்பர் கப்பை போட்டுவிட்டது மட்டுமில்லாமல் அவரே வீடியோவும் எடுத்து பத்திரிக்கைக்கு கொடுத்துள்ளார்.
இந்த செய்தி தெரிந்தவுடன் நான் உடனடியாக அதிகாரிகளை அனுப்பி விசாரிக்க சொன்னேன். அதிகாரிகள் விசாரித்து இந்த தகவலை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
பேப்பர் கப் தான் போட வேண்டும் என்று சிறுவனின் அப்பா சொன்னதால் அதை போட்டு விட்டது தவறு. நம்முடைய விதிமுறைகளின் படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.
இது ஒரு சிறிய விஷயம் தான். ஆனால் இதை வேண்டுமென்றே செய்த மாதிரி தான் தெரிகிறது. இது இவ்வளவு பெரிய செய்தியாக ஊடகங்களில் வந்திருப்பது வருத்தம் அளிக்கக்கூடிய விஷயமாகவும் உள்ளது.
உத்திரமேரூர் மருத்துவமனையில் பெரியவர் மற்றும் சிறியவர்களுக்கான ஓ2 மாஸ்க் போதுமான அளவிற்கு கையிருப்பு இருக்கிறது.
யார் வந்தாலும் எடுத்து காட்ட தயார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
மோனிஷா
எம்.ஜி.ஆர் சிலை மீது பெயிண்ட் : ஜெயக்குமார் எச்சரிக்கை!
ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க என்.எல்.சி.க்கு உத்தரவு!