ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 விதமான உயர் பதவிகளுக்காக ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வை யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கு 1056 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது யுபிஎஸ்சி.
இதற்கான முதல் நிலை தேர்வை எழுதுவதற்கு 9 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து சுமார் 6 லட்சம் பேர் கடந்த ஜூன் 16ஆம் தேதி நடந்த தேர்வை எழுதினர்.
இதன் முடிவு கடந்த ஜூலை 1ஆம தேதி வெளியானது. முதல் நிலை தேர்வில் நாடு முழுவதும் இருந்து 14,627 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 600க்கும் அதிகமானோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு கடந்த செப்டம்பர் 20,21,22 ,28, 29 ஆகிய ஐந்து தேதிகளில் நடைபெற்றது.
இந்த நிலையில் முதன்மை தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி நேற்று (டிசம்பர் 9) வெளியிட்டுள்ளது.
இதில் 2,845 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 141 பேர் தேர்வாகியுள்ளனர்.
இதில் மனிதநேய ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகத்தில் பயிற்சி பெற்ற 39 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், நேர்முகத் தேர்வுக்கான பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் முதன்மை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் இன்று (டிசம்பர் 10) முதல் சென்னை சிஐடி நகரில் உள்ள மனிதநேய அகாடமியை நேரில் அணுகலாம் என்று மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நேர்முகத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்காக சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி, குறிப்புகள், கையேடு மற்றும் தினசரி வகுப்புகள், தனிப்பட்ட வழிகாட்டுதல்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
நேர்முகத் தேர்வில் பங்கு பெற டெல்லி சென்று வருவதற்கு விமான பயண சீட்டும் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்குவதற்கும் உணவிற்கும் ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
2024 யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் அசோதியா பர்த் சுரேஷ்குமார் முதல் ரேங்க்கை பெற்றுள்ளார். தாக்கர் விசார்க் விஜய் பாய் இரண்டாவது இடத்தையும், ஜாதவ் வினித் மூன்றாவது இடத்தையும், அபி நான்காவது இடத்தையும், கித்தன் ரத்தோடு ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
நேர்காணல் குறித்த கூடுதல் விவரங்களுக்கு 011-23385271,
011-23381125, 011-23098543 தொலைப்பேசி எண்கள் மற்றும் csm-upsc@nic.in என்ற இமெயில் முகவரியை தொடர்புக் கொள்ளலாம் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
விரைவில் நேர்காணலுக்கான தேதி அறிவிக்கப்படும்.
நேர்காணலுக்கு முன்னதாக முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் Detailed Application Form-II என்ற படிவத்தை ஆன்லைன் வழியாக நிரப்ப வேண்டும்.
இதற்கு டிசம்பர் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் அளிக்கப்படும்.
முதல் நிலை, முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வு நடைபெறும். இந்த தேர்வை தொடர்ந்து முதன்மை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி ஒதுக்கப்படும்.
தொடர்ந்து டேராடூனில் உள்ள இந்திராகாந்தி தேசிய வனப்பயிற்சி மையத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். அதைத்தொடர்ந்து அவர்கள் பணியில் சேர்வார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
கிச்சன் கீர்த்தனா: ஹெர்பல் சாட்!
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு… வேலூரில் வறண்டு கிடக்கும் ஏரிகள்: என்ன காரணம்?