யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு குடிமைப் பணி முதல் நிலை தேர்வு 2022 ஜூன் 5ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 11,35,697 பேர் தேர்வு எழுத விண்ணப்பிருந்த நிலையில் 5,73,735 பேர் தேர்வில் பங்கேற்றனர். 2022 செப்டம்பரில் நடத்தப்பட்ட முதன்மை எழுத்துத் தேர்வுக்கு 13,090 பேர் தகுதி பெற்றனர். இவர்களில் 2,529 பேர் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர்.
நேர்முகத் தேர்வில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் என பல்வேறு பணிகளுக்காக மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 613 பேர் ஆண்கள், 320 பேர் பெண்கள்.
முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர்.
டெல்லி பல்கலைக்கழகத்துக்குட்பட்ட ஸ்ரீராம் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற இஷிதா கிஷோர் முதலிடம் பெற்றுள்ளார். கிரோரிமல் கல்லூரியில் வணிகவியலில் பட்டம் பெற்ற கரீமா லோஹியா 2ஆம் இடம் பெற்றுள்ளார்
ஹைதராபாத் ஐஐடியில் கட்டுமானப் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்ற உமா ஹரதி 3ஆம் இடத்தை பிடித்துள்ளார். மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் பெற்ற ஸ்மிர்தி மிஷ்ரா 4ஆம் இடம் பெற்றுள்ளார். தேர்ச்சி அளவில் முதல் 25 இடம் பிடித்தவர்களில் 14 பேர் மகளிர், 11 பேர் அண்கள்.
முதலிடம் பிடித்த சென்னை மாணவி
யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே தமிழ்நாடு அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார் சென்னை பெரம்பூரை சேர்ந்த மாணவி ஜீஜீ. தேசிய அளவில் 107ஆவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவரின் தந்தை எலக்ட்ரீசியன் தொழில் செய்துவருகிறார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் பெண்கள் கல்லூரியில் படித்த, ஜீஜீ 2022ஆம் ஆண்டுதான் முதன் முதலில் யுபிஎஸ்சி தேர்வை எழுதியுள்ளார். முதல் தேர்விலேயே தேர்ச்சி பெற்றுள்ளார்.
தேர்ச்சி பெற்றது குறித்து அவர் கூறுகையில், “ஐஎப்எஸ் ஆக வேண்டும் என்பது ஆசை. சிறு வயதில் பத்திரிகையாளராக வேண்டும் என விரும்பினேன், பள்ளி படிப்பு முதலே செய்தித்தாள் வாசிப்பதில் எனக்கு ஆர்வம், இதுதான் தேர்வில் தேர்ச்சி பெற உதவியது. எனக்கு கல்லூரி பேராசியரும், பெற்றோரும் உதயவியாக இருந்தனர். ஒரு வருடம் முழு கவனம் செலுத்தி படித்தாலே தேர்ச்சி பெற்றுவிடலாம்” என்றார்.
இரண்டாம் இடத்தை பிடித்த அரசு ஊழயர்
நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் ஆர். ராமகிருஷ்ணன் தமிழகத்தில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
தென்காசி அருகே திருவேங்கடம் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன்- தனலட்சுமி தம்பதியரின் மகன் ராமகிருஷ்ணன். அண்ணா பல்கலை கழகத்தில் இன்ஜினியரிங் முடித்த அவர், டிஎன்பிஎஸ்சி தேர்வில் பொறியியல் துறை பணியாளர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றார்.
ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு 2019ஆம் ஆண்டு முதல் முயற்சி செய்து வந்த ராமகிருஷ்ணன் 2022ஆம் ஆண்டு நடந்த தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். 2022ல் ராமகிருஷ்ணன் எழுதியது நான்காவது முறை எழுதிய தேர்வாகும்.
இந்த தேர்வில் இந்திய அளவில் 117ஆவது இடத்தையும், தமிழக அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
ஒரே குடும்பத்தில் இரு அதிகாரிகள்
பண்ருட்டி அருகே முந்திரி விவசாயி மகள் சுஷ்மிதா தேர்ச்சி பெற்றுள்ளார். இந்திய அளவில் 528வது இடத்தை பிடித்துள்ளார். இவரது சகோதரி ஐஸ்வர்யா 2020ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது பொன்னேரி துணை ஆட்சியராக உள்ளார்.
மேலும் தமிழகத்தில் இருந்து, சென்னையைச் சேர்ந்த மதிவதனி 447 ஆவது இடத்தையும், எழிலரசன் 523 ஆவது, குடியரசு என்ற அரசு ஊழியர் 849 ஆவது இடத்தையும், ராகுல் 858 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தென்காசியைச் சேர்ந்த சுப்புராஜ் தமிழில் தேர்வு எழுதி, அகில இந்திய அளவில் 621வது இடம் பிடித்துள்ளார்.
பிரியா
ருதுராஜ் அரைசதம்: குஜராத் அணிக்கு 173 ரன்கள் இலக்கு!
இந்திய-ஆஸ்திரேலிய நட்பை இணைக்கும் 3C, 3D, 3E : பிரதமர் மோடி