யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் சென்னையைச் சேர்ந்த மதிவதனி 447ஆவது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
2022ஆம் ஆண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், குரூப் ‘ஏ’ மற்றும் குரூப் ‘பி’ பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி தேர்வு நடைபெற்றது.
ஜூன் மாதம் முதல்நிலை தேர்வும், செப்டம்பர் 16 – 25 வரை முதன்மை தேர்வும் நடைபெற்றது.
கடந்த டிசம்பர் 6 அன்று முதன்மை தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. கடந்த ஜனவரி தொடங்கி மே 18 வரை முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.
180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,022 இடங்களுக்கு நடந்த தேர்வில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவை இன்று (மே 23) யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் 4 இடத்தை பெண்களே பிடித்துள்ளனர். இஷிதா கிஷோர் முதலிடம், கரிமா லோஹியா 2ஆவது இடம், உமா ஹராதி 3ஆவது இடம், ஸ்மிருதி மிஸ்ரா 4ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து கோவில்பட்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ண சாமி அகில இந்திய அளவில் 117ஆவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
புதுக்கோட்டையில் துணை ஆட்சியராக பணியாற்றி வரும் சரவணன் 147ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த மதிவதனி 447ஆவது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
இவரது தந்தை இராவணன். வழக்கறிஞராக பணியாற்றுகிறார். தாய் அருணா, கல்லூரி பேராசிரியராக உள்ளார்.
பி.இ. இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை அண்ணா பல்கலையில் 2014ஆம் ஆண்டு முடித்த மதிவதனி, தற்போது ஆர்பிஐ பெங்களூரு கிளையில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.
மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று விடாமுயற்சியுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து யுபிஎஸ்சி தேர்வை எழுதி வந்தார். இதுவரை 4 முறை நேர்காணல் வரை சென்ற அவர் இறுதி பட்டியலில் இடம்பெறவில்லை.
எனினும் சோர்வடையாமல் தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியுடன் தேர்வெழுதிய மதிவதனி 2022ஆம் ஆண்டு நடந்த தேர்வில் அகில இந்திய அளவில் 447 ஆவது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்ற இருக்கிறார் மதிவதனி.
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற மதிவதனி உள்ளிட்ட அனைவருக்கும் மின்னம்பலம் சார்பில் வாழ்த்துகள்.
பிரியா
’’தோனியை வெறுப்பவங்க பிசாசாதான் இருக்கனும்’’: குஜராத் கேப்டன் ஹர்த்திக் பாண்டியா
சென்னை உயர்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!