Untouchability Violence: What Can Teachers Do?

தீண்டாமை வன்கொடுமை: என்ன செய்துவிட முடியும் ஆசிரியர்கள்?

சிறப்புக் கட்டுரை தமிழகம்

நா.மணி

(ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை)

இன்றைய காலகட்டத்தில், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ, தெரிந்தோ, தெரியாமலோ, சாதியம் பள்ளிக்குள் தலை காட்டுகிறது. சில நேரங்களில் நாங்குநேரி போல் தலைவிரித்து கோர தாண்டவம் ஆடுகிறது. பள்ளிகளில் மட்டுமல்ல, கல்லூரி, பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் என எங்கும் தலை காட்டுகிறது. வடிவங்கள், வார்த்தைகள், செயல்பாடுகள் வேறுபடுகிறது. அளவுகள் அளவீடுகள் மாறுபடுகிறது. அதிகாரத்தின் தொனியும் மொழியும் மாறுபடுகிறது அவ்வளவே.

இன்னும் சில பத்தாண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்திருக்கும்?  70களில் 80களில் கூட, பள்ளிக்குள் இரட்டை குவளை முறை சர்வசாதாரணம். மதிய உணவு தட்டுகள் பாகப்பிரிவினை சர்வ சாதாரணம். பட்டியல் சமூகத்தை சார்ந்த ஆசிரியர்கள் பணியாற்றிய பள்ளிகளிலேயே கூட, இவை சர்வ சாதாரணமாக அரங்கேறியது. ஆனால், 60கள் தொடங்கி, தனது பணியை நிறைவு செய்யும் வரை, ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் சாதியத்தை பள்ளிக்குள் அண்ட விடாமல் விரட்டியடித்தார். பள்ளிக்கு வெளியே, சாதி பேயாட்டம் போட்டாலும், பள்ளிக்குள் தன் வாலை சுருட்டி வைத்துக் கொண்டு இருந்தது.

அவர் பணியாற்றிய பள்ளி ஒரு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி. 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பள்ளி. அப்பள்ளியின் ஸ்தாபகர், அதற்கு, சாந்தினிகேதன் எனப் பெயர் சூட்டினார். அதன் ஸ்தாபகர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். 1962 முதல், 1967ஆம் ஆண்டு வரை, காங்கேயம் சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் இருந்திருக்கிறார். கே. எஸ் நடராஜ கவுண்டர் என்ற அந்த மனிதரின் பெயரில் மட்டும் தான் சாதி இருந்தது. எங்கள் பள்ளிக்கு வரும்போதே அவர் தலைமை ஆசிரியராகத்தான் வந்தார். ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் அது ஒன்றே நடுநிலைப் பள்ளி. எனவே பள்ளியில் கூட்டம் நிரம்பி வழியும்.

அன்றைய காலகட்டத்தில், ஏழு, எட்டு வயதில் பள்ளி வந்து சேருவது இயல்பானது. அதனால் மீசை முளைத்த மாணவர்கள் நிறைய இருந்தார்கள். மீசை முளைத்த தங்கராசு அண்ணன் கூட எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். ஆனால், ஒன்றாம் வகுப்பு மாணவன் கூட, தங்கராசு அண்ணனை பெயர் சொல்லித் தான் அழைக்க வேண்டும். நீ, நான், வா, போ என்று தான் கூப்பிட வேண்டும். வயதில் மூத்தவர் என்பதால் வாங்க, நீங்க, என்று பேசக் கூடாது. வயதுக்கேற்ற மரியாதை, சாதிக்கான மரியாதையாக, மாறி விடக் கூடாது என்று தலைமை ஆசிரியர் நினைத்தார்.

குடிநீர், மதிய உணவு என எங்கும் சாதிப் பிரிவினையின் சாயல் கூட தெரியக் கூடாது என்று அவர் கண்டிப்போடு இருந்தார். இந்தப் பள்ளிக் கூடத்தில் தான் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். அடுத்து, காங்கேயம் அரசு மேல்நிலைப் பள்ளியில், உயர் மேல்நிலைக் கல்வி. பின்னர், கல்லூரிக் கல்வி முடிந்து, 90 களின் தொடக்கத்தில் கல்லூரி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன்.

 

 

 

 

 

 

 

 

2001 ஆம் ஆண்டில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் அறிமுகமானது. அதன் பின்னரே கற்றல் கற்பித்தல் முறைகள், மதிப்பீட்டு உத்திகள் குறித்து வாசிக்கவும், பேசவும், எழுதவும் வாய்ப்புகள் அமைந்தது. இந்த நிலையில் பள்ளிக் கூடத்தில் நிலவும் சாதிப் பாகுபாடுகள் குறித்து புரியத் தொடங்கியது. நாங்கள் படித்த சமகாலத்தில், வேறு பள்ளிகளில் இரட்டை குவளை முறை இருந்ததெல்லாம் தெரியவந்தது. அப்படியிருக்க, 60களிலேயே, தீண்டாமையின் நிழல் கூட படியாமல், எப்படி பள்ளியை நடத்தினார் எங்கள் பொன்னுசாமி தலைமை ஆசிரியர்? என்பது நினைவுக்கு வருகிறது.

எப்படி அவருக்கு இது சாத்தியமானது? என்ற கேள்வி மூளையை குடையத் தொடங்கியது. அப்பள்ளியில் படித்து முடித்து, சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து, எங்கள் தலைமை ஆசிரியரை சந்தித்தே ஆக வேண்டும் என்ற அவஸ்தைக்கு தள்ளப்பட்டேன். எனது சகோதரர் துணையோடு, அவருடன் சந்திப்பு சாத்தியம் ஆனது. இரவு ஏழு மணிக்கு மேல் அந்த சந்திப்பு. சந்திப்பின் நோக்கம் குறித்து கூறினேன். “ஊரெல்லாம் பல இடங்களில், அரசுப் பள்ளிகளிலேயே, இரட்டை குவளை முறை இருந்த காலகட்டத்தில், தீண்டாமையின் தீக்கங்குகள் கூடப் படாது, நம் பள்ளியை எப்படி பாதுகாத்தீர்கள்” என்றேன்.

இப்படி ஓர் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால், கேள்வியை கேட்டதும் முகம் பிரகாசமானது. அவரது உடம்பின் இரத்த நாளங்கள் துடிப்பதை என்னால் உணர முடிந்தது. ‘கொஞ்சம் அருகில் வா’ என்றார். கையை இறுகப் பிடித்துக் கொண்டார். என் முகத்தை உற்றுப் பார்த்தார். “இத்தனை ஆண்டுகளில், என்னை யாரும் கேட்காத கேள்வி” என்றார். “என் மாணவன் ஒருவன், நான் சாவதற்குள் இக்கேள்வியை கேட்பான் என்று கனவிலும் நினைக்கவில்லை” என்றார்.

“இந்தக் கேள்விக்கு விடையளிக்க, நான் எனது கடந்த காலத்திற்குள் செல்ல வேண்டும்” என்று கூறிக் கொண்டே, மனைவியை அழைத்தார். தண்ணீர் கேட்டு பருகினார். “தீண்டாமை சாதிப் பாகுபாடுகளுக்கு எதிரான என் போராட்டம் என்னில் தோன்றியதில்லை. எங்கள் தமிழாசிரியர் மூட்டிய தீ. அவர் ஊன்றிய விதை. தீண்டாமைக்கு எதிரான எனது செயல்திறன் எங்கள் தமிழாசிரியர் அளித்த கொடை” என்று பேச்சை தொடங்கினார். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது ஓர் செய்யுள்.‌ “சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா பொறிமுறையின் மேதினியில் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி “.

ஔவையார் - தமிழ் விக்கிப்பீடியா

அவ்வையாரின் இந்தப் பாட்டு தான் அன்றைய பாடம். இந்த ஒரு பாட்டுக்கு, ஒரு பாடவேளையை அவர் எடுத்துக் கொண்டார். பாட்டை நடத்தி, முடித்து, எல்லோரையும் பார்த்து, ஒரு கேள்வி கேட்டார். “பாட்டு பிடித்திருக்கிறதா?” என்றார் . ஒரே குரலில், “ஆமாங்கய்யா”. “அந்த பாட்டில் பொருள் புரிகிறதா?” என்றார். உரத்த குரலில் பதில், “ஆமாங்கய்யா” அளித்தோம். மூன்றாவது கேள்வியாக, “சாதி இரண்டு தான். இரண்டே இரண்டு தான். ஆண் சாதி. பெண் சாதி”. இதனை மனதளவில் ஏற்றுக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார். இதற்கும் “ஆமாங்கய்யா” என பதில் கொடுக்க, “உண்மையாகவா” என்று திருப்பிக் கேட்டார். ‘ஆம்’ என்று ஆமோதித்தோம்.

“சரி! நீங்கள் மனதளவில் இந்த கருத்தை ஏற்றுக் கொண்டது உண்மையெனில்,ஒரு காரியம் செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் சொல்வது உண்மை என்று நம்புவேன்.” எனப் பீடிகை போட்டார். “சரிங்க ஐயா” என்ற எங்களை, சுற்று முற்றும் பார்த்தார். வகுப்பறை முழுவதும் அவர் முகத்தையே ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தது. ‘சரி! உங்களை நம்புகிறேன். இங்குள்ள அரிசன மாணவர்கள் அப்படியே அமர்ந்து கொள்ளுங்கள். மீதமுள்ளவர்கள் எழுந்து நில்லுங்கள்”. வகுப்பறை பரபரப்பாகி விட்டது. “சாதி இரண்டே இரண்டு தான். ஆண் சாதி. பெண் சாதி. மற்ற சாதிகள் கற்பிதம்” என்று அவ்வையாரின் இந்தப் பாடலை நம்புவோர் , உங்களுடன் உடன் படிக்கும், இதோ! உட்கார்ந்து கொண்டிருக்கும், சக மாணவர்களை, உங்கள் சக நண்பர்களை, இன்று இரவே, உங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இன்று இரவு, அவர்கள் உங்களோடு, உங்கள் வீட்டில், தங்கியிருக்க வேண்டும். நாளை காலையில் பள்ளிக்கு வரும் பொழுது, அவர்களுக்கும் காலை சிற்றுண்டி தயார் செய்து எடுத்துக்கொண்டு பள்ளிக்கு வர வேண்டும்”.

என்ன சொல்கிறீர்கள் என்று எங்களை பார்த்து கேட்டார் . ஒரு சிலர் தங்களால் இயலாது என பின் வாங்கிக் கொண்டனர். ஒரே சலசலப்பு . கையை உயர்த்தி, வகுப்பறையை அமைதிப்படுத்தினார். “யார் யார், யார் யாரை அழைத்துக் கொண்டு செல்லப் போகிறீர்கள்? என எனக்கு பட்டியல் கொடுங்கள்” என்று கூறிவிட்டு, வகுப்பை விட்டு சென்று விட்டார். அழைத்துச் செல்ல தயாராக இருந்த மாணவர்கள், ஒரு காரியம் செய்தனர். அவர்கள் சொந்த ஊரில் பட்டியல் சமூக மாணவர்கள் இருந்தால், அவர்களை தவிர்த்து விட்டு, வெளியூர் மாணவர்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். வீட்டில் கேட்டபோது, சாதியை மாற்றி கூறி சமாளித்துக் கொண்டனர்.

நான்,எனது உள்ளூர் நண்பனையே அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். ஐயா குறிப்பிட்டதை போல், அன்று இரவு எங்கள் வீட்டில் தங்கி, உண்டு, உறங்கி,மகிழ்ந்து, மதிய உணவோடு நண்பனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று விட்டேன். ஒரே நாளில் இந்த செய்தி ஊர் முழுவதும் தீயாக பரவி விட்டது. இன்னார் மகன், இன்னாரை அழைத்து வந்து, வீட்டில் தங்க வைத்து அனுப்பி இருக்கிறான் என்று. அப்போது எங்கள் ஊருக்கு பொதுக் கிணறு இல்லை. அருகில் உள்ள தோட்டங்களில், ஏற்றம் இறைக்கும் போது தான், தண்ணீர் சேகரித்துக் கொள்ள வேண்டும். அன்று காலை அம்மா வழக்கம் போல் தண்ணீர் எடுக்கச் சென்றார். “ஏம்மா!உங்களுக்கு சாதி பேதம் இல்லை. ஆனால் எங்களுக்கு இருக்கு. அதனால, இன்று முதல் கொண்டு தண்ணீர் எடுக்க வேண்டாம்” என்று கூறிவிட்டார்.

அம்மா அதிர்ச்சி அடைந்து விட்டார். பயம். இன்று முதல் தண்ணிக்கு என்ன செய்வது? என்ற அச்சத்தோடு வீட்டுக்கு வந்தார். காலி குடத்தை வீட்டில் வைத்துவிட்டு, அப்பாவிடம் செய்தியை சொன்னார். நான் பள்ளிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன் “நீ புறப்பட்டு போ” என்று கூறிவிட்டு, அப்பா தான் செல்ல வேண்டிய ஜவுளி வியாபாரத்திற்கு செல்லாமல், எங்கோ புறப்பட்டு சென்றார். யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை.

நாளை முதல் தண்ணிக்கு என்ன செய்வது? என்று அம்மா முகம் இருளடிந்து கிடந்தது. என்னை இருவரும் ஏதும் கூறவில்லை. எங்கள் ஊரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எங்கள் ஊரில் மணியகாரர் வீடு. அவரைப் பார்த்து நிலைமையை விளக்கினார் அப்பா. செய்தியை கேள்விப்பட்ட மணியகாரர், “சபாஷ்! நல்ல காரியம் செய்திருக்கிறார் உங்கள் மகன். அவனை பாராட்ட வேண்டும். இப்படிப்பட்ட செயலுக்கு தூண்டிய அந்த பள்ளி ஆசிரியரையும் போற்ற வேண்டும்” என்று சந்தோஷப்பட்டார். “தண்ணீர் பிரச்சனையை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று தைரியம் ஊட்டினார்.

Untouchability Violence: What Can Teachers Do?

பணியாளரை அழைத்து “நீ செங்கோடம்பாளையம் சென்று, வீர போயனை உடனடியாக அழைத்துக் கொண்டு வா” என்று கூறிவிட்டு, வீர போயனுக்காக காத்திருந்தார். தனது பணிகளை தள்ளிப் போட்டார். வீர போயன் வந்ததும், “ஊதியூரில் பொது கிணறு இன்று வரை இல்லை. பொது கிணற்றுக்கான உடனடி தேவை வந்துவிட்டது. உடனடியாக, இன்றே ஊதியூர் செல்ல வேண்டும். பொது இடத்தில், ஜலம் பார்த்து, கிணற்றை வெட்டத் துவங்க வேண்டும். தண்ணீர் வரும் வரை வேறு வேலைகளுக்கு செல்லக் கூடாது” என வீர போயனுக்கு உத்தரவிட்டார். உத்தரவை நிறைவேற்றும் உறுதியை அளித்து விட்டு புறப்பட்டு சென்றார் வீர போயன். மீண்டும் தனது பணியாளரை அழைத்து, ஊதியூரில் பொதுக் கிணறு வெட்டி, தண்ணீர் வந்து, இவர் பயன்படுத்தும் வரை, நம் வீட்டில் இருந்து, தினந்தோறும் வண்டியில் தண்ணீர் இவர் வீட்டுக்கு செல்ல வேண்டும்” என்று பணித்தார்.

என் தந்தையாருக்கு என்ன சொல்வதென்று தெரிய வில்லை. அதிர்ச்சி, பயம், மகிழ்ச்சி கலந்து நின்று கொண்டு இருந்தார். மணியகாரர், அப்பாவை அருகில் அழைத்தார். அப்பா அருகில் சென்று பணிந்து பணிந்து நின்றார். “நிமிர்ந்து நில்லுங்கள். உங்கள் மகன் என்ன செய்திருக்கிறார். அவனை பெற்றதற்காக பெருமைப்பட வேண்டும். நன்கு படிக்க வையுங்கள். ஒரு நாள் அழைத்து வாருங்கள். நான் அவனை பார்க்க வேண்டும்” என்று கூறி அனுப்பி வைத்தார்.

“எனது செயலால், குடிக்கத் தண்ணீர் கிடைக்காமல், குடிபெயர்ந்து விடுமோ எங்கள் குடும்பம் என்று அஞ்சினேன் . அந்த அச்சத்தை, ஒரே நாளில் போக்கினார். இப்படித்தான் தொடங்கியது எனது தீண்டாமைக்கு எதிரான யுத்தம்” என்று கூறி முடித்தார். இரவு பத்து மணியை கடந்து விட்டது. நானும் என் அண்ணனும் மட்டுமே இருந்தோம். என்னையும் அறியாமல் எழுந்து நின்று கை வலிக்க கை தட்டினேன். அன்று, அவரது முகத்தில் பொங்கி வந்த ஒளி, இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் நிழலாடுவதை உணர முடிகிறது.

60களிலேயே, பள்ளிக்குள் தீண்டாமை தீண்ட விடாத அவரது தீரம் அதன் பின்னனி, மாணவர்கள் பெற்றோர்கள் என யாருக்கும் தெரியாது. ஆனால், “பள்ளி என்றால் அதற்குள் தீண்டாமை இருக்காது”என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். பள்ளியில் வா போ என்று கூப்பிட்டுக் கொள்ளும் மாணவர்கள், சிலர் பள்ளிக்கு வெளியேயும் அவ்வாறே இயல்பாக அப்படியே பேசிக் கொண்டார்கள். அதனை சிலர் பெற்றோர் கண்டிப்பார்கள்.

அதே பெற்றோரில் மற்றொரு பகுதி, “பள்ளிக்குள் தொட்டு விளையாடுகிறார்கள். ஒரே குவளையில் தண்ணீர் குடிக்கிறார்கள். ஒன்றாய் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். வெளியே பேசினால் என்ன?” என்று கண்டு கொள்ள மாட்டார்கள். சாதி பாகுபாடு, தீண்டாமை ஆகியவற்றுக்கு எதிராகவும், சமூக சமத்துவத்தையும் பயணிக்க வழி அமைத்து கொடுக்க வேண்டிய பள்ளிகள், இன்று வர்க்க அடிப்படையில் பிரிந்து கிடக்கிறது. சாதிப் பாகுபாடு அதில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. காமராஜர் உருவாக்கி, கட்டி வளர்த்த, அன்றைய பொதுக் கல்வியை அப்படியே வளர்தெடுத்திருந்தால், இன்றைக்கு நாங்குநேரிகள் உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை.

Untouchability Violence: What Can Teachers Do? பள்ளிக்குள் மட்டுமல்ல, பள்ளிக்கு வெளியே தீண்டாமை கொடுமைகள், பாகுபாடுகள் குறைந்திருக்கும். இவற்றை சரி செய்ய இயலாதவாறு, பள்ளிக்கல்வி முறையில் பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு, நீதி போதனைகள் வழியாக, சமூக சமத்துவத்தை எட்டி விடலாம், என்று இன்று திட்டமிட்டு வருகிறோம். தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல், கணிதம், அறிவியல் என எல்லா பாடத்திலும், எல்லா பாடங்களிலும் அறிவியல் கண்ணோட்டத்துடன், பாடங்களை சொல்லிக் கொடுக்க முடியும், என்பதற்கு 50களில் பொன்னுசாமி ஆசிரியருக்கும் ஆசிரியராக இருந்த தமிழாசிரியரே உதாரணம்.

அவ்வாறு போதித்தால், எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் பொன்னுசாமியை போல, ஆயிரம் ஆயிரம், பொன்னுசாமிகளை இந்த சமூகம் இன்றைய பள்ளி கல்வி முறை உருவாக்க முடியும். பொதுக் கல்வி முறையும் கற்பித்தலில் அறிவியல் கண்ணோட்டமுமே சாதியத்தை கேள்விக்குள்ளாக்கும். சாதி பாகுபாடுகளை தீண்டாமையை வேரறுக்கும் கருவிகளாக அந்தக் கேள்விகள் மாறும். நாங்குநேரி சம்பவம், பலரையும், பல்வேறு விதங்களில், இன்று சித்திரவதை செய்து கொண்டிருக்கும்போது, அன்றைய நினைவுகளை அசைபோடுவதும், அவற்றை மீண்டும் சாத்தியப்படுத்த முடியுமா என யோசிப்பதும் இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது.

கட்டுரையாளர் குறிப்பு

Untouchability Violence: What Can Teachers Do? na mani

நா.மணி பேராசிரியர் மற்றும் தலைவர், பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு. tnsfnmani@gmail.com

கிச்சன் கீர்த்தனா: பட்டர் சிக்கன் மசாலா

சென்னை: பயன்பாட்டுக்கு வரும் இரண்டாவது உள்நாட்டு முனையம்!  

+1
0
+1
0
+1
0
+1
10
+1
0
+1
3
+1
0

1 thought on “தீண்டாமை வன்கொடுமை: என்ன செய்துவிட முடியும் ஆசிரியர்கள்?

  1. கண்ணீர் வரவழைத்து விட்டது ❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *