தரமற்ற மருந்துகள் தொடர்பாக வாட்ஸ் அப் மூலம் மருந்து தரக் கட்டுப்பாட்டுத் துறைக்குப் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 வருட காலமாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தது. மேலும் பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப சில நோய் தொற்றுகளாலும் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
தற்போதைய சூழலிலும் கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் இன்புளுயண்சா வைரஸ் பரவல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மருந்துகளின் தேவை அதிகரித்துள்ளது.
எதற்கெடுத்தாலும் மருத்துவர்களை அணுக வேண்டாம் என்று மக்கள் சிலர் அவர்களாகவே மருந்தகங்களுக்குச் சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்கிறார்கள். இது தவறானது மற்றும் பாதுகாப்பற்றது என்று மருத்துவர்களும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.
இதனிடையே மக்கள் தாமாக மருந்தகங்களுக்கு சென்று மருந்துகளை வாங்குவதால் சில நேரத்தில் தரமற்ற மருந்துகளும் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யப்படுகிறது.
தரமற்ற மருந்துகள் குறித்து நேரடியாகவோ அல்லது கடிதம் வாயிலாகவோ அளிக்கப்படும் புகார்கள் மீது மருந்து தரக் கட்டுப்பாட்டுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தரமற்ற மருந்துகள் குறித்து மக்கள் வாட்ஸ் அப் வாயிலாகவும் புகார் அளிக்கலாம் என்று மருந்து தரக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் விஜயலட்சுமி அறிவித்துள்ளார்.
மேலும் வாட்ஸ் அப்-பில் புகார் அளிப்பதற்காக 9445865400 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு மக்கள் அளிக்கும் புகார்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடனடியாக முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் மருந்து தரக் கட்டுப்பாட்டு இயக்குநர் விஜயலட்சுமி.
மோனிஷா