விருதுகோரி விண்ணப்பித்த பேராசிரியரின் அசல் சான்றிதழ்களை எட்டு வாரங்களில் திரும்ப ஒப்படைக்காவிட்டால் 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆர்.சுப்பிரமணியன். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு, ’தமிழ்நாடு மூத்த விஞ்ஞானி விருது’க்காக விண்ணப்பித்திருந்தார். இந்த விருதுக்காக தன்னுடைய அசல் சான்றிதழ்களை சென்னைப் பல்கலைக்கழகத்தில் அளித்துள்ளார்.
ஆனால், அவருக்கு விருது கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது அசல் சான்றிதழ்களை திரும்ப அளிக்கக்கோரி சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், பல்கலைக்கழக தரப்பில் இருந்து அவருக்கு எந்தப் பதிலும் வரவில்லை.
இதைத் தொடர்ந்து, தனது அசல் சான்றிதழ்களைத் திரும்ப அளிக்க சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.சுப்பிரமணியன் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில், ’மனுதாரரின் அசல் சான்றிதழ்களை பதிவாளர் அலுவலகம் பெறவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “நீதிமன்ற உத்தரவின்படி மனுதாரரின் விண்ணப்பம் மற்றும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அசல் சான்றிதழ்கள் மட்டும் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என பதிவாளர் கூறுவதை ஏற்க முடியாது.
மனுதாரரின் அசல் சான்றிதழ்களை எட்டு வாரங்களில் சென்னைப் பல்கலைக்கழகம் ஒப்படைக்க வேண்டும். தவறும்பட்சத்தில், மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
’அசல் சான்றிதழ்கள் காணாமல் போயிருந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டிய 10 லட்சம் ரூபாயை, சான்றிதழ் காணாமல் போனதற்கு காரணமானவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘மனுதாரருக்கு வழக்கு செலவாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்’ எனவும் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார்.
ஜெ.பிரகாஷ்
கொரோனா பீதியில் வீட்டிற்குள் முடங்கிய குடும்பம்: கதவை உடைத்து மீட்ட அதிகாரிகள்!
கீதா ஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜக: பதட்டத்தில் தூத்துக்குடி