இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூலை ஒன்றாம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று (ஜூன் 30) நீட் தேர்வில் முதல் 25 இடத்தைப் பிடித்த 50 மருத்துவ மாணவர்களுக்கு முதன்முறையாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா விருந்தளித்தார்.
இந்த வருடம் நீட் முதுநிலை தேர்வை மொத்தம் 2,06,301 பேர் எழுதினர். கடந்த ஜூன் 2ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நீட் தேர்வில் வெற்றி பெற்று தரவரிசையில் முதல் 25 இடங்களை மொத்தம் 50 மருத்துவ மாணவர்கள் பிடித்துள்ளனர். இவர்களை பாராட்டும் வகையிலும், மேலும் நீட் தேர்வு வகுப்புகளை வருங்காலத்தில் எழுதும் மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையிலும் இன்று (ஜூலை 1) பாராட்டு விழா நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக நேற்று மாலை மன்சுக் மாண்டவியா அந்த 50 மருத்துவ மாணவர்களுக்கும் தனது வீட்டில் விருந்தளித்தார். அதைத் தொடர்ந்து முதல் 25 இடங்களை பிடித்த 50 மருத்துவ மாணவர்களுடன் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடினார். மேலும் இன்று புதுடெல்லியில் உள்ள லேடி ஹார்டிங் கல்லூரியில் மருத்துவர்களை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பாராட்டி பேச உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தின் முன்னாள் முதலமைச்சரும், புகழ்பெற்ற மருத்துவருமான டாக்டர் பி.சி.ராய் அவர்களின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் மருத்துவர் தினத்தில் கொரோனா காலத்தில் மருத்துவ சேவைகளைப் பாராட்டி பிரதமர் மோடி இந்திய மக்கள் சார்பாக நன்றி தெரிவித்தார்.