தமிழகம் முழுவதும் 66,70,825 பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் வேலையில்லா திண்டாட்டம் சமூகத்தின் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.
முன்பெல்லாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு பதிவு மூப்பின்படி வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது.
தற்போது வேலைவாய்ப்பு அலுவலகங்கள் செயல்படுகின்றனவா, அவை மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த நிலையில் 31.05.2023 தேதியின்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள்… ஆண்கள் 30,98,879; பெண்கள் 35,71,680; மூன்றாம் பாலினம் 266… ஆக மொத்தம் 66,70,825 பேர் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது
இவர்களில் 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 17,39,747
19 முதல் 30 வயது வரை உள்ள பல தரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 28,33,380
31 முதல் 45 வயது வரை உள்ள அரசுப்பணி வேண்டி காத்திருப்போர் 18,44,602
46 வயது முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவு தாரர்கள் 2,46,705
60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் 6,391 பேர் என்று வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை குறித்து வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, “வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலை கொடுக்கும் நிலை தற்போது இல்லை. போட்டித் தேர்வுகளின் மூலம்தான் தற்போது எந்தவொரு அரசுப் பணிக்குமான பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வழிகாட்டு மையங்களாகவும், திறன்மேம்பாட்டு மையங்களாகவும் மாற்றப்பட்டு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல்களை மட்டும் வழங்கி வருகின்றன.
அதனால் வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது” என்கின்றனர்.
“ஒரே மாதிரியான படிப்புகளைத் தேர்ந்தெடுப்பது, தொழில்முனைவோர் பற்றாக்குறை எனப் பல காரணிகளால் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுகிறது.
அரசு வேலைவாய்ப்பை மட்டும் நம்பாமல் தங்கள் படிப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தினால் நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். இப்படி வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் நிலை ஏற்படாது.
மேலும் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், சில தனியார் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இவையே வேலையின்மை பிரச்சினைக்குத் தீர்வாக இருக்கும்” என்கிறார்கள் கல்வியாளர்களும், தொழில்துறையைச் சேர்ந்தவர்களும்.
ராஜ்
டிஜிட்டல் திண்ணை: மாணவர்கள் வழியாக மாண்புமிகு! 2031 ஐ நோக்கி விஜய்யின் வேட்டை திட்டம்!
ஆளுநரின் சித்து விளையாட்டுக்கள்: ஸ்டாலின் ஆவேசம்!
”கார் போகாதா? எடுய்யா டூ வீலரை” வாழைத் தோட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.
