உளுத்தம் சுவாலை… ஈழத்து உணவுகளில் ஓர் இனிப்புச் சிற்றுண்டி. இது அதிக புரதச்சத்தைக் கொண்ட காலை உணவு. காலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கும், வேலைக்குப் போகிறவர்களுக்கும் ஏற்ற உணவு. இதை குறுகிய நேரத்தில் தயாரித்து விடலாம். இந்த குடியரசு நன்னாளில் நாமும் செய்து ருசிப்போம்.
என்ன தேவை?
வறுத்த அரிசி மாவு – ஒரு கப்
வறுத்து அரைத்த உளுந்து மாவு – அரை கப்
வறுத்த பாசிப்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்
பனை வெல்லம் – கால் கப்
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – கால் கப்
உப்பு – சிறிதளவு
எப்படிச் செய்வது?
உளுந்து மாவு, அரிசி மாவு, பாசிப்பருப்பு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு, கையில் ஒட்டாத அளவுக்கு பிசையவும். இதை இடியாப்ப அச்சில் இட்டு இட்லித் தட்டில் பிழிந்து… இட்லி சட்டியில் வைத்து 20 நிமிடங்கள் வரை வேக வைத்துக் கொள்ளவும். பிறகு இந்த இடியாப்பத்தை உதிர்த்து வெண்ணெய், தேங்காய்த்துருவல், பனை வெல்லம் சேர்த்தால், மணம் கமழும் சத்தான உணவு தயார்.