ஆணவக் கொலையால் தன் காதல் கணவரை இழந்த உடுமலை கௌசல்யா, இப்போது புதிதாக சலூன் கடையைத் திறந்திருக்கிறார். அதை மலையாளத்தின் பிரபல நடிகை திறந்து வைத்துள்ளார்.
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால், கடந்த 2016 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கெளசல்யா மற்றும் அவரது கணவர் சங்கர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சங்கர் பலியானார்.
தமிழ்நாடு முழுதும் இந்த தாக்குதல் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில்… உடுமலை கௌசல்யா சாதி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக மாறினார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கெளசல்யாவின் தந்தை சின்னசாமி, எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் என்ற மைக்கேல், ஜெகதீசன் தன்ராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும்,
மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னர், கோவை வெள்ளலூரை சேர்ந்த ’தமிழக பாரம்பரிய கல்யாண பறை இசை’ குழுவின் ஒருங்கிணைப்பாளரும் பறை இசை கலைஞருமான சக்தியை கோவையில் 2018 டிசம்பரில் மறுமணம் செய்து கொண்டார் கௌசல்யா.
தற்போது சாதி எதிர்ப்பு ஆர்வலராக மாறி திராவிட இயக்கங்களுடன் பணியாற்றிவருகிறார்.அவருக்கு மத்திய அரசில் வேலை கிடைத்தது.
ஆனாலும் தொடர்ந்து அவரால் அரசியல் ரீதியாக தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்த முடியாததால் அந்த வேலையில் இருந்து விலகினார்.
இந்நிலையில், இன்று (செப்டம்பர் 25 ) கோவை வெள்ளலூரில் சலூன் கடை தொடங்கியுள்ளார். இந்த சலூன் கடையை பிரபல மலையாள நடிகை பார்வதி திறந்து வைத்துள்ளார்.
இதன் மூலம் சமூகத்தில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் கௌசல்யா.
இந்த கடைத் திறப்புக்கு நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தலைகீழாகக் கவிழ்ந்த அரசுப் பேருந்து!
சிவகார்த்திகேயனின் ’மாவீரன்’: ஓடிடி விற்பனையில் சாதனை!