விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த உதயநிதி

தமிழகம்

மதுரை திருப்பாலை யாதவர் பெண்கள் கல்லூரி ஆடிட்டோரியத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.

விழாவில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கிராமப் பஞ்சாயத்துக்களுக்கும் 33 வகை விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, எறிபந்து, டென்னிஸ், ஜிம் உபகரணங்கள், ஸ்கிப்பிங், கேரம், சிலம்பம், செஸ், கபடி, பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உபகரணங்கள் மற்றும் டி-ஷர்ட்டுகள், தொப்பிகள், விசில் உள்ளிட்ட அனைத்துப் பொருட்கள் அடங்கிய Bag இந்த தொகுப்பில் அடங்கும்.

விழாவில் அமைச்சர் உதயநிதி பேசும்போது,

“தமிழகத்தில் 12, 620 கிராம ஊராட்சிகளுக்கும், கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், 86  கோடி ரூபாய் செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.

கலைஞர் பெயரில், 33 வகை விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைப்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம்.

கலைஞர் பெயரில் எவ்வளவு திட்டங்கள் இருந்தாலும், இந்த விளையாட்டுத் துறைக்கு கலைஞர் பெயரில் துவக்கப்படும் முதல் திட்டம் இது என்பதை விளையாட்டுத் துறை அமைச்சர் என்ற முறையில் மகிழ்ச்சி அடைகிறேன்.

கலைஞருக்கு இலக்கியவாதி, எழுத்தாளர் பேச்சாளர் என பல முகங்கள் உண்டு. ஏன் கலைஞர் பெயரை இந்த திட்டத்திற்கு வைத்து இருக்கிறோம் என உங்களில் பல பேர் நினைக்கலாம்.

கலைஞர் விளையாட்டின் தீவிர ரசிகர். கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும், கால் பந்தாக இருந்தாலும் தனது நேரமின்மையின் இடையிலும், தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும் தீவிர விளையாட்டு ரசிகர் கலைஞர்.

ஒரு விளையாட்டு வீரனுக்கு இருக்க கூடிய அனைத்து திறமைகளும், குணங்களும் கலைஞருக்கு இருந்ததனால் தான், இந்த திட்டத்திற்கு கலைஞர் பெயரைச் சூட்டினோம்.

வசதிகள் குறைவாக இருந்த அந்தக் காலத்திலேயே கிராமம் கிராமமாக சுற்றுப் பயணம் செய்து திமுகவை வளர்க்க அரசியல் பணி செய்தவர் கலைஞர். விளையாட்டு வீரனைப் போல் ஆற்றல் மிக்கவர், எனர்ஜி மிக்கவர் கலைஞர். கலைஞரிடம் இருந்த அந்த எனர்ஜி ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் இருக்க வேண்டும்

கலைஞருக்கு இருந்த Sharp mind ஒரு ஆச்சர்யமான விஷயம். அரசியலில் எதிரணியினரை கணித்து வெற்றி கண்ட கலைஞரின் திறன், ஒவ்வொரு விளையாட்டு வீரர்க்கும் கண்டிப்பாக வேண்டும். எதிரணியிரைக் கணித்து விளையாடும் திறன், ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் வேண்டும்.

உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற கலைஞரின் மன உறுதி ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் இருக்க வேண்டும்.

ரூபாய் 8 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில், செயற்கை synthetic தடகளம் மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட உள்ளது. இது மதுரையைச் சேர்ந்த ஒலிம்பிக் தடகள வீராங்கனை ரேவதி போன்றோரின் கோரிக்கை ஆகும்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி சோழவந்தான் தொகுதியில் 3 கோடி ரூபாய் மதிப்பில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு திறப்பு விழா காண உள்ளது.

விளையாட்டுத் துறைக்கு என பல விருதுகளை தமிழக அரசு வாங்கி உள்ளது. தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி, தமிழக அரசு தொடர்ந்து விருதுகளை வாங்கும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டெல்லி பாஜக மாநாட்டில், அண்ணாமலை தரையில் உட்கார்ந்தாரா… உட்கார வைக்கப்பட்டாரா?

தமிழ்நாடு பட்ஜெட் இலட்சினை வெளியீடு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *