தூத்துக்குடியில் விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராமத்தில் விஏஓவாக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ்.
கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி தனது அலுவலகத்தில் பணியில் இருந்து வந்தபோது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மணல் கொள்ளையை தடுத்த விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த கொலை வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் கலியாவூரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு மற்றும் மாரிமுத்து உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரது மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
தற்போது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விஏஓ கொலை செய்யப்பட்ட வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதனிடையே லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கை இரண்டு மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சுரேஷ் நியமிக்கப்பட்டார். மொத்தம் 52 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், இரும்பு போன்ற 13 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை நடந்து முடிந்து இன்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
குற்றவாளிகள் ராமசுப்பு, மாரிமுத்து இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, இருவருக்கும் தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த வழக்கில் ஏப்ரல் மாதம் கொலை நடந்த நிலையில் ஐந்தே மாதங்களில் தீர்ப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா