தங்கர்பச்சானுக்கு கிளி சோதிடம் பார்த்த சோதிடர் உட்பட 2 பேரை வனத்துறையினர் இன்று (ஏப்ரல் 9) காலை கைது செய்த நிலையில், தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளராக பிரபல சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.
அவர் கடந்த 7ஆம் தேதி கடலூர் ஒன்றியம் தென்னம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்குள்ள அழகுமுத்து அய்யனார் கோயிலில் இருந்த கிளி சோதிடக்காரரிடம் சோதிடம் கேட்டார்.
அவருக்கு கிளி எடுத்துக் கொடுத்த சீட்டில் அய்யனார் படம் இருந்ததை அடுத்து, வெற்றி நிச்சயம் என்று சோதிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தங்கர்பச்சான், அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு ஓட்டு கேட்க சென்றார்.
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ், கிளிகளை வளர்ப்பது குற்றம் என்று கூறி கிளி சோதிடம் பார்த்த செல்வராஜ், சீனிவாசன் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 4 கிளிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ”தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி சோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் சோதிடம் பார்க்கிறார்கள். இப்போது கைது செய்யப்பட்ட சோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக சோதிடம் பார்த்து வருகிறார். அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு சோதிடம் கூறிய பிறகு சோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்” என்று ஆளும் திமுக அரசை விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட கிளி சோதிடர்கள் இருவரையும் வனத்துறையினர் தற்போது விடுவித்துள்ளனர்.
எனினும் கிளிகளை அடைத்து வைத்த குற்றத்திற்காக இருவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தங்கர்பச்சானுக்கு சீட்டு எடுத்துக் கொடுத்த கிளி சோதிடர் கைது… அன்புமணி கண்டனம்!
11வது சம்பவம் : அமெரிக்காவில் சடலமாக இந்திய மாணவர் கண்டெடுப்பு!