பள்ளி வளாகத்தில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கோவிந்தராஜ். இவரது மகள் மோனிகா (வயது 10) 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான வேலு என்பவரின் மகள் இராஜலட்சுமி (வயது 13) 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
மோனிகா மற்றும் இராஜலட்சுமி இருவரும் நேற்று (செப்டம்பர் 26) அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் மூழ்கினர்.
இருவரும் நீரில் மூழ்கியதை பார்த்த மணிவேல் என்ற 5 வயது சிறுவன் சிறுமிகளின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளான். இதனை கேட்ட பெற்றோர்கள் பதறிப்போய் பள்ளி வளாகத்திற்கு சென்று பார்த்தபோது சிறுமிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்பலூர் காவல்துறையினர் சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார், கல்வித்துறை அதிகாரிகள், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுமிகளின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்த சிறுமி மோனிகாவின் தந்தை கோவிந்தராஜ்,
“சாலை அமைப்பதற்காக பள்ளிக் கூட வளாகத்தில் இருந்து 20 அடி அளவு மண்ணை அள்ளிக் கொண்டு சென்றுள்ளனர்.
அந்த பள்ளத்திற்கு அருகே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது வழுக்கி விழுந்து அதில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டனர்.
இதற்கு யார் பதில் சொல்வது?” என்று கேள்வி எழுப்பினார். சிறுமியின் தாயார்,
“இந்த பள்ளத்தை வெளியில் தோண்டியிருந்தால் கூட நாங்கள் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் பள்ளிக் கூடத்திற்குள் பள்ளம் தோண்டியுள்ளார்கள்.
இதற்குப் பள்ளி தலைமை ஆசிரியர் முதல் சாலை அமைப்பதற்கு ஒப்பந்தம் எடுத்தவர்கள் வரை பதில் சொல்ல வேண்டும்.
என் பிள்ளைக்கு வந்த நிலைமை வேறு எந்த பிள்ளைக்கும் வரக் கூடாது. இதற்கு அரசாங்கம் தான் ஒரு நல்ல வழி காட்ட வேண்டும்” என்று கதறி அழுகிறார்.
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
சனாதன வழக்குகள் விளம்பரத்திற்காகவே: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு
அதிமுக பாஜக கூட்டணி விலகல் நிரந்தரமா? – பிரேமலதா கேள்வி!