தருமபுரம் ஆதீனம் குருபூஜை நிகழ்விற்காக அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகள் தும்பிக்கையால் கட்டித்தழுவிய புகைப்படம் காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானாம்பிகை உடனுறை ஞானபுரீஸ்வர் கோயில் வைகாசித் திருவிழா கடந்த மே 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான பட்டினப்பிரவேசம் இன்று (ஜூன் 10) இரவு நடைபெற உள்ளது.
தருமபுரம் ஆதீனத்தின் குருபூஜை நிகழ்விற்காக தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட திருக்கடையூர் கோவில் அபிராமி யானையும், அதே தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட திருவையாறு கோவில் தர்மாம்பாள் யானையும் நேற்று அழைத்து வரப்பட்டன.
வந்த இடத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட இரண்டு யானைகளும் தும்பிக்கைகளால் ஆரத்தழுவி அன்பை பரிமாறிக் கொண்டன.
இந்த காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
இந்த காலகட்டத்தில் நட்பாக பழகிய மனிதர்களையே நீண்ட நாட்களுக்குப் பிறகோ, மாதங்கள் அல்லது வருடங்களுக்குப் பிறகோ சந்தித்தால், கடந்த காலத்தில் இருந்த அதே அன்போடு பேசி பழகுவதில்லை. நலம் விசாரிப்பதில்லை. அவர்களுக்கிடையே ஏதோ ஒரு இடைவெளி இருக்கும்.
இப்படி ஆறறிவு கொண்ட மனிதர்களே எளிதில் அன்பாக பழகியவர்களை விட்டு விலகிக் கொள்ளும் சூழலில் யானைகள் தும்பிக்கையால் கட்டித் தழுவி அன்பை பரிமாறிக் கொண்ட நிகழ்வு மனிதர்களுக்கே ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.
யானைகளுக்கு ஞாபசக்தி அதிகம் என்பதால் உடன் பழகிய விலங்குகள் மற்றும் மனிதர்களை விரைவில் மறந்துவிடாது.
அதனால் நீண்ட நாட்கள் கழித்துப் பார்த்தாலும் கடந்த காலத்தில் இருந்த அதே அன்போடு பழகும்.
மேலும் யானைகளுக்கு மனிதர்களைப் போல எமோஷனல் இருப்பதால் யானைகளால் இவ்வாறு நடந்து கொள்ள முடியும் என்கிறார்கள் விலங்கு நல ஆர்வலர்கள்.
யானைகள் மட்டுமல்ல நாய், பூனை உள்ளிட்ட மற்ற விலங்குகளும் உடன் பழகிய விலங்குகளையும் மனிதர்களையும் எளிதில் மறந்துவிடாது.
மோனிஷா
பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு எதிராக தடையை மீறி ஆர்ப்பாட்டம்?