இரண்டு சத்தங்கள்: கோவை ஜமாத்தினரிடம் அதிகாரிகள் தெரிவித்த முக்கிய தகவல்!

தீபாவளிக்கு முதல் நாள் அக்டோபர் 23ம் தேதி அதிகாலையில் கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்ததை தொடர்ந்து 5 இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ.விடம் தமிழக அரசு விசாரணைக்காக ஒப்படைத்திருக்கிறது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று ( 26.10.2022) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முக்கியமான ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்கிறது. கோவை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து ஜமாத்துகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை மாநகரில் இயங்கி வரும் இஸ்லாமிய கட்சிகள் மற்றும் அமைப்புகளின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பள்ளிவாசல்களின் ஜமாத் நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே இஸ்லாமி, ஜாக், சுன்னத் ஜமாத் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட ஜமாத்துக்களை சேர்ந்த 200 பேர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து அதில் கலந்துகொண்ட சிலரிடம் விசாரித்தோம்.

“கூட்டத்தில் கலந்துகொண்ட ஜமாத்தார் பேசுவதற்கு முன் மாவட்ட எஸ்பியும், கோவை மாநகர காவல் ஆணையாளரும் தற்போது கோவையில் நடந்தது என்ன, நடப்பது என்ன என்பது குறித்து விளக்கினார்கள்.
தீபாவளிக்கு முதல் நாளான அக்டோபர் 23 ஆம் தேதி, ஜமேஷா முபீன், அன்று அதிகாலை வேண்டுமென்றே வெடிபொருட்களை வெடிக்கச் செய்ததற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கார் வெடித்த போது 2 சத்தங்கள் கேட்டதாகவும் கூறியுள்ளார்கள். காருக்குள் 3 டிரம்களில் வெடி பொருட்களும் 2 சிலிண்டர்களும் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் ஜமேஷா முபீன் வேண்டுமென்ற வெடி பொருட்களை வெடிக்கச் செய்ததாகவும் தெரியவந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக் கிழமை அன்று அதிகாலை கார் வெடிப்பு நடந்த இடத்தில் 2 வெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும் முதலாவதாக வெடித்தது வெடி பொருட்கள் என்றும் 2-வதாக வெடித்ததுதான் சிலிண்டர் என்றும் ஜமாத் நிர்வாகிகளிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அடுத்த நாள் தீபாவளியை மக்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியுடனும் கொண்டாட வேண்டும் என்பதற்காக சிலிண்டர் வெடித்ததை மட்டுமே பிரதானமாகக் கூறியதாகவும் ஜமாத்தாரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்” என்கிறார்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ஜமாத்தார்களில் சிலர்.

அப்துல் ராஃபிக்

கோவை கார் வெடிப்பு: என்.ஐ.ஏ. விசாரிக்க மத்திய அரசு உத்தரவு!

பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு சம உரிமை: பிசிசிஐ அதிரடி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts