சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள துணிக்கடையின் இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நம்மாழ்வார்பேட்டை சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பி.எம்.எஸ் டவர் என்ற கட்டிடத்தில் இயங்கி வரும் ஃபேப் இந்தியா என்ற துணிக்கடையில் ஒட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு ஹரினிஸ்ரீ என்ற 5 வயது மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். சங்கர் பணியாற்றி வரும் கடைக்கு தினமும் இரவு அவரது மனைவி மற்றும் மகள் ஹரினி வழக்கமாகச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில் நேற்று (ஜனவரி 28) அவரது மனைவி ஹரினிஸ்ரீயை அழைத்துக் கொண்டு சங்கர் வேலை பார்க்கும் கடைக்கு சென்றுள்ளார். அப்போது கட்டடத்தின் முன் உள்ள இரும்பு கேட் அருகே ஹரினிஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தார்.
சங்கரும் அவரது மனைவியும் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டு ஹரினிஸ்ரீயை அழைத்துள்ளனர். ஆனால் காவலாளி சிறுமி இருப்பதைக் கவனிக்காமல் கேட்டை முடியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக இரும்பு கேட் சிறுமி மீது விழுந்துள்ளது. இதில் சிறுமியின் தலை மற்றும் உடலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுமியைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், ஆட்டோ மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
ஆனால் ஹரினிஸ்ரீ நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் போலீசார் அஜாக்கிரதையாகச் செயல்படுதல், மரணத்தை விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் கேட் எவ்வாறு விழுந்தது என்பதையும் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் இந்த வழக்குத் தொடர்பாகக் கடையின் காவலாளி சம்பத் மற்றும் மேலாளர் ஸ்ரீனிவாசன் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி பெங்களூருவில் உள்ள கடையின் உரிமையாளரை விசாரணைக்கு அழைத்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோனிஷா
ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு : ஏ.எஸ்.ஐ கைது
எமெர்ஜென்சி எக்சிட் திறப்பு: பயணி மீது வழக்குப் பதிவு!