தமிழகம் முழுவதும் இன்று ( ஜூலை 24 ) டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. மொத்தம் 7,301 பணியிடங்களுக்கு 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளனர்,
7,301 பணியிடங்களுக்கு 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியிருப்பது மக்களுக்கு அரசு பணியில் இருக்கும் ஈடுபாட்டை எடுத்துக் காட்டுவதுடன், வேலை இல்லா திண்டாட்டத்தையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. இதில் பல தேர்வர்கள் ஏற்கனவே ஏதோ ஒரு வேலையில் பணிபுரிந்து கொண்டே அரசு பணிக்கும் தயாராகி வருகிறார்கள்.
இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கிராம நிர்வாக அலுவலர் ( விஏஒ ) , இளநிலை உதவியாளர் உள்ளிட்ட ஆகிய பதவிகளில் பணிபுரிவார்கள். ஆனாலும் பலருக்கும் இந்த விஏஒ பதவி மீதுதான் கண்ணாக இருக்கிறது.
குரூப் 4 தேர்வின் மூலம் நியமிக்கப்படும் பதவிகளில் கிராம நிர்வாக அலுவலர் ( VAO ) பதவி தான் முதன்மை பதவி என்பதால் தேர்வு எழுதிய இளவட்டங்கள், ’நாங்கதான் நாளைய விஏஓ’ என்று ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வருடம் தேர்வு எளிதாக இருப்பதாக பலரும் தெரிவித்து வரும் நிலையில்… தேர்வர்களின் நம்பிக்கையை குறிப்பதாக கருதப்படுகிறது. மேலும் இதற்காக விஜய், வடிவேலு, தமிழ் படம் சிவா என்று பல நடிகர்களையும் தங்களுக்கு சப்போர்ட்டாக அழைத்துக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் தேர்வில் கேட்கப்பட்ட சில கேள்விகளும் பேசு பொருளாகி இருக்கிறது. அதில் குறிப்பாக “விராட் கோலி எத்தனை ஆண்டுகளாக சதம் அடிக்கவில்லை? “ என்ற கேள்வி பொது அறிவு பிரிவில் கேட்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் பற்றி அறியாதவர்களோ தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.
மேலும் சிலர் “ ஒரே நாளில் குரூப் 4 க்கு படித்து பாஸ் ஆவது எப்படி” என்று கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.
பல வருடங்களாக டிஎன்பிஎஸ்சிக்குத் தயாராகி வரும் சீனியர்களோ, “நாலைஞ்சு தடவை எக்சாம் எழுதின நாங்களே அமைதியா இருக்கோம். ஒரே ஒரு எக்சாமை எழுதிட்டு ட்விட்டர்ல இவங்க படுத்துற பாடு அய்யோய்யோ…” என்று சந்தானம் பாணியில் சலித்துக் கொள்கிறார்கள்.
மோனிஷா