புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் போதை ஒழிப்பு விழிப்பு உணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்ற பகுதியில் தவெக கொடி கட்டிய கார் விபத்து ஏற்படுத்திய நிலையில், காரில் மது போதையில் இருந்த மூன்று பேரைப் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்தனர். tvk car entered the anti drug rally
தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடையே போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
போட்டி தொடங்கியதும் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போட்டிப் போட்டு ஓடினர். அப்போது, அந்த வழியாகத் தமிழ்நாடு வெற்றிக் கழகம் கட்சியின் கொடிகட்டி வந்த கார் ஒன்று தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த தண்ணீர் லாரி மீது மோதி நின்றது. இதைப் பார்த்த பொதுமக்கள், மாரத்தான் போட்டியில் பங்கு பெற்ற இளைஞர்கள் என அனைவரும் அலறி அடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் அந்த காரில் இருந்தவர்களை வெளியே இறங்கச் சொல்லிக் கூச்சலிட்டனர். அப்போது, காரில் இருந்த மூன்று இளைஞர்கள் மது போதையிலிருந்தது தெரியவந்தது. இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், அந்த மூன்று பேரையும் காரில் இருந்து வெளியே தள்ளி சரமாரியாகத் தாக்கினர்.
பின்னர், சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்த திருமயம் காவல் நிலைய போலீஸார், மது போதையிலிருந்த மூன்று பேரையும் பொதுமக்களிடமிருந்து மீட்டு, திருமயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவர்களிடம் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கார் ஓட்டி வந்தது சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஒன்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி மணி எனத் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, அவர்கள் மூன்று பேர் மீதும் திருமயம் போலீஸார் மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து ரூ.10,000 அபராதம் விதித்தனர். போதை ஒழிப்பு மாரத்தான் போட்டிக்குள் மது போதையில் கார் ஓட்டி வந்தவர்கள் விபத்தை ஏற்படுத்தியது அந்தப் பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.