முறப்பநாடு கோவில்பத்து விஏஓ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கொலையாளி மாரிமுத்துவை தனிப்படை போலீசார் இன்று (ஏப்ரல் 26) கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 53).
சில நாட்களுக்கு முன்பு இவர் தாமிரபரணி ஆற்றில் நடைபெற்று வந்த மணல் கொள்ளையை தடுக்க முயன்றார். அப்போது மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த ராமசுப்பு மற்றும் அவர் உடன் இருந்தவர்கள் லூர்து பிரான்சிஸுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி லூர்து பிரான்சிஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
விஏஓ கொலை
இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 25) பணியில் ஈடுபட்டிருந்த லூர்து பிரான்சிஸை முன்விரோதம் காரணமாக ராமசுப்பு மற்றும் அவரது உறவினரான மாரிமுத்து ஆகிய இருவர் அலுவலகத்திற்குள் நுழைந்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
அக்கம் பகத்தில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த முறப்பநாடு காவல்துறையினர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த லூர்து பிரான்சிஸை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தொடர்ந்து லூர்து பிரான்சிஸின் உடல் இன்று (ஏப்ரல் 26) உடற்கூராய்விற்கு பிறகு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

லூர்து பிரான்சிஸின் உடலைப் பார்த்து அவரது மகன்கள், மகள் மற்றும் குடும்ப உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஒருவர் கைது
கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் உடனடியாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று ராமசுப்பு என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த மற்றொரு கொலையாளி மாரிமுத்துவை கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பால சரவணன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாரிமுத்துவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். விஏஓ கொலை வழக்கில் கைதான இரண்டு பேரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மோனிஷா