தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தாமிரபணி ஆற்றுக்கு அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 20-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் கண்மாய்கள் உடைந்தது. இதன்காரணமாக பல கிராமங்கள் வெள்ள நீரால் சூழ்ந்தன.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கனமழை பாதிப்பால் தூத்துக்குடி மாவட்டத்தில் 60 சதவிகித இடங்களில் மின் இணைப்பு, இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நீர் தேங்கிய இடங்களில் படிப்படியாக வடிந்து வருகிறது. ஆனால் இன்னும் முழுமையாக மழைநீர் வடியவில்லை. அண்ணாநகர், டூவிபுரம், மில்லர் நகர், ராம் நகர், ஸ்டேட் பாங்க் காலனி போன்ற பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தேங்கிய மழை நீர் வடியாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி – எட்டயபுரம் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மழை நீர் தேங்கியிருந்தது. ஆனால் இந்த வெள்ள நீர் தற்போது முழுமையாக வடிந்துள்ளது. திருச்செந்தூர் – தூத்துக்குடி சாலையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான கடைகள் திறக்கப்படாததால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத சூழல் நிலவுகிறது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மத்தியக்குழு இன்று ஆய்வு செய்கிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
”ஆளுநரின் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது” : தங்கம் தென்னரசு