தூத்துக்குடியில் மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதால் 21 தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியாபுரம் பகுதியில் நிலா சீ புட்ஸ் தனியார் மீன் பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வருகிறது. அங்குள்ள கடற்கரையில் இருந்து மீன்கள் கொள்முதல் செய்யப்பட்டு, இந்த ஆலையில் பதப்படுத்தப்பட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று (ஜூலை 19) இரவு 11 மணியளவில் மீன் பதப்படுத்தும் ஆலையில் உள்ள அமோனியா சிலிண்டரில் வாயுக்கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அமோனியா வாயு ஆலை முழுவதும் பரவியுள்ளது.
இதன்காரணமாக, ஆலையில் பணியாற்றிக்கொண்டிருந்த கும்பகோணத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், ஒடிசாவைச் சேர்ந்த 15 பெண்கள் உள்பட 21 பேருக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் அதிகாரிகள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்களை அங்கிருந்து மீட்டு அருகில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.
அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு… ஷாக்கான ரஞ்சித்
டாப் 10 நியூஸ்: திமுக சட்டத்துறை கருத்தரங்கம் முதல் விசிக மா.செ.க்கள் கூட்டம் வரை!