தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்ட, கொடூர சம்பவத்தின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) அனுசரிக்கப்படுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை:
தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் காப்பர் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டது.
மேலும், இந்த ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் காப்பர் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுப்புகை வெளியேறியதால், அப்பகுதியில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக, ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இந்த போராட்டங்கள் மூலமாக ஸ்டெர்லைட் ஆலை மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால், ஆலையை விரிவாக்கம் செய்வதற்கான வேலையில் வேதாந்தா நிறுவனம் ஈடுபட்டது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொடர்ந்து அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, போராட்டம் 100 நாட்களை எட்டிய நிலையில், மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேசனை சந்தித்து மனு கொடுப்பதற்காக ஊர்வலமாக சென்றனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகம் அருகே ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் அவர்களை அங்கிருந்து கலைக்கும் விதமாக காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.
இதன் காரணமாக, பொறுமையிழந்த மக்களும் காவல்துறையினருக்கு எதிராக கற்களை வீசி எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து, பொதுமக்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றதால், காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.
இதன்படி, காவல்துறை வாகனங்களின் மீது ஏறி கண்மூடித்தனமாக போராட்டக்காரர்களை நோக்கி சுட்டனர். இதனால், பொதுமக்கள் அங்கும் இங்கும் கலைந்து ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 15 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
அப்போது தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்” என்று பதிலளித்தார். இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அந்த ஆணையத்தின் அறிக்கையில், “துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடியில் அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேசன், தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் உள்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்று 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (மே 22) அனுசரிக்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களும் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’வடக்கன்’ தலைப்புக்கு தடைபோட்ட சென்சார் போர்டு… இதுவரை சிக்கலை சந்தித்த அரசியல் படங்கள்!