துருக்கியில் நேற்று (பிப்ரவரி 6) அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிப் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று (பிப்ரவரி 6) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியிருந்தது.
துருக்கியின் நர்டஹி பகுதி அருகே ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 17 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்களும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
நிலநடுக்கம் உணரப்பட்ட போது, சாலைகளில் தஞ்சம் அடைந்த மக்கள் கட்டிடங்கள் இடிந்து விழும் போது பதறிக் கொண்டு ஓடும் வீடியோ காட்சிகள் பார்ப்பவர்கள் மனதையே பதற வைக்கும் அளவிற்கு அமைந்துள்ளது.
கட்டிடங்கள் மட்டுமின்றி துருக்கியின் நெடுஞ்சாலைகளும் இரண்டாகப் பிளந்து காட்சியளிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து, படுகாயமடைந்த நிலையிலும் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
நேற்று நிலநடுக்கத்தின் போது 100 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேரம் செல்ல செல்ல பலி எண்ணிக்கை அதிகரித்து இன்று (பிப்ரவரி 7) காலை 7 மணி நிலவரப்படி 3,800 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் காலை 7.45 மணியளவில் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மேலும், 14 ஆயிரத்திற்கு அதிகமானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகளும் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
துருக்கியில் 1999-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைப்போல, தற்போதைய நிலநடுக்கமும் துருக்கி வரலாற்றில் வடுவாக மாறியுள்ளது.
ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து துயரத்தில் மூழ்கியுள்ள துருக்கி மக்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல்களையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், “துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கங்கள் மிகவும் வருத்தமளிக்கிறது, மேலும் பெரும் உயிர் இழப்புகள், காயங்கள் மற்றும் அழிவுகளால் நான் வேதனைப்படுகிறேன்.
இந்த துயரமான நேரத்தில் இரு நாட்டு மக்களுக்கும் எனது இதயம் நெகிழ்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, டெல்லியில் உள்ள துருக்கி தூதரகத்திற்குச் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிகாரிகளிடம் ஆறுதல் தெரிவித்தார்.
துருக்கியில் ஏற்பட்ட பேரழிவிற்கு உதவும் வகையில், சிறப்புப் பயிற்சி பெற்ற மோப்பநாய் படை, தேவையான உபகரணங்கள் மற்றும் 100 பேர் கொண்ட இரண்டு பேரிடர் மீட்புப் படையினர், மீட்புப் பணிகளுக்காகத் துருக்கிக்கு செல்ல உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படியே பேரிடர் மீட்பு குழுவினரும் துருக்கிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
இந்தியாவை போல பல நாடுகள் தங்கள் நாட்டு பேரிடர் மீட்புப் படையைத் துருக்கிக்கு அனுப்பி வைத்து தங்களது உதவிக் கரங்களை நீட்டி வருகிறது.
மோனிஷா
கிச்சன் கீர்த்தனா: சோயா உப்புமா!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!