கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து தமிழ்நாடு அரசு விலக்களித்துள்ளது.
கொரோனா நோய் தொற்று உலகளவில் பெரும் உயிர் சேதத்தையும், பொருளாதார சேதத்தையும் ஏற்படுத்தியது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றினால் 38,032 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே கடந்த 29-5-2021 அன்று அறிவிப்பு வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , கொரோனா தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும்.
பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்களில் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அளிக்கப்படும். இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும்” என்று தெரிவித்திருந்தார்.
நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
தற்போது தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், என்சிபிசிஆர் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சமூக நலத்துறை சார்பில் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மேலும் அவர்கள் தொடர்ந்து அதே பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும், அதனை தொடர்ந்து கண்காணிக்கவும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- க.சீனிவாசன்