10 வருடங்கள் தனது ஓட்டுநர் உரிமத்தை நியாயமில்லாமல் ரத்து செய்திருப்பதாக டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.
யூடியுபர் டிடிஎஃப் வாசன் கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி காஞ்சிபுரம் அடுத்த பாலுச்செட்டி பகுதியில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அபாயகரமாக இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கினார். இதனை தொடர்ந்து டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த பாலுச்செட்டி போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
அவரது ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் டிடிஎஃப் வாசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நவம்பர் 1-ஆம் தேதி டிடிஎஃப் வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் புழல் சிறையில் இருந்து டிடிஎஃப் வாசன் இன்று விடுவிக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் டிடிஎஃப் வாசன் பேசும்போது, “சிறை அனுபவம் என்பது எனக்கு புதிது. சிறையில் இருந்த பலரும் எனக்கு உதவிகரமாக இருந்தார்கள். அதிகாரிகள் பண்பாக நடந்து கொண்டார்கள். பைக் தான் என்னுடைய வாழ்க்கை. 10 வருடங்கள் ஓட்டுநர் உரிமத்தை நியாயமில்லாமல் ரத்து செய்திருக்கிறார்கள். இந்த தலைமுறை இளைஞர்கள் ஸ்மார்ட்டாக உள்ளனர். பைக்கும் ஓட்டுவேன், படமும் நடிப்பேன். என்னுடைய பேஷனை விட்டுக்கொடுக்க முடியாது. கையில் அடிபட்டது கூட பரவாயில்லை, லைசன்ஸ் இல்லை என்றதும் கண்கலங்கிவிட்டேன். சர்வதேச லைசன்ஸ் எடுப்பேன் அல்லது மேல்முறையீடு செய்வேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியன் இஸ் பேக்: அறிமுக வீடியோ வெளியானது!
பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கு: லோக் ஆயுக்தா விசாரிக்க ஆணை!