அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 5) தள்ளுபடி செய்தது.
சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில் கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கியதாக டிடிஎஃப் வாசன் செப்டம்பர் 19-ஆம் தேதி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்தநிலையில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “சாலையில் மிதமாக வந்த நிலையில் கால்நடைகள் குறுக்கே வந்ததால் விபத்து ஏற்பட்டது. காயங்கள் அதிகமாக இருப்பதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதியளிக்க வேண்டும். எந்தவித குற்றத்திலும் ஈடுபடவில்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைக்கு கட்டுப்படுவேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
காவல்துறை தரப்பில், “வாசனை யூடியூபில் 45 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். அவருக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான பைக் உள்ளது. அவர் அணியும் பாதுகாக்கும் கவசங்கள் ரூ.2 முதல் ரூ.3 லட்சம் மதிப்புடையது. இந்த விபத்தில் அவர் உயிர் தப்பிருக்கலாம். ஆனால் மற்ற இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பைக் கேட்பார்கள். இதுபோன்று ஒரு சிலர் அபாயகரமான சாகசத்தில் ஈடுபட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து விளம்பரத்திற்காகவும் மற்ற இளைஞர்களை தவறான வழியில் செயல்பட வாசன் தூண்டுவதால் தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என்றும் ஜாமீன் வேண்டுமென்றால் பைக்கை எரித்துவிட்டு யூடியூப் சேனலை முடக்கிவிட்டு நீதிமன்றத்தை நாடலாம் என்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லியோ அப்டேட்: திரிஷாவின் ஃபர்ஸ்ட் லுக்!
ஐடி சோதனை: பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அனுமதி மறுப்பு!
இன்பமாய் இருக்குதய்யா