தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்கச்சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் வரும் 1ஆம் தேதி முதல் ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயர்த்தப்படுவது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் இரண்டாகப் பிரித்து ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது அந்த வகையில் தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் 29 சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன. இந்தத் தகவல்களை அண்மையில் வெளியிட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை திருத்தப்பட்ட சுங்கக்கட்டண விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கோவை மற்றும் மதுரைக்குச் சென்று திரும்பும் வாகனங்கள் ஏற்கனவே செலுத்தும் கட்டணத்தைவிட கூடுதலாக ரூ.55 வரை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை ஒருமுறை கடந்து செல்லும் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கான கட்டணம் 70 ரூபாயில் இருந்து 75 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
சிற்றூந்து இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு 110 ரூபாயில் இருந்து ரூ.120 ஆக சுங்கக்கட்டணமாக வசூலிக்கப்பட்ட உள்ளது. இதேபோல் பேருந்து டிரக்குகளுக்கு 235 ரூபாயில் இருந்து 255 ரூபாய் என சுங்கக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று அச்சுகள் கொண்ட வணிக வாகனங்களுக்கு 255 ரூபாயில் இருந்து 280 ரூபாயாகவும் பல அச்சுகள் கொண்ட கட்டுமான இயந்திரங்களுக்கு 370 ரூபாயில் இருந்து ரூ.400 ஆகவும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்ட உள்ளது.
அதிக அளவு கொண்ட வாகனங்களுக்கான கட்டணமும் ரூ.485 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தமிழ்நாடு தலைவர் ராஜ் கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் வாடகைக்கு இயக்கப்படுகின்றன.
சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்திக்கொண்டே சென்றால் இத்தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டு இதனை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தும் முறை வேண்டும்.
இதை வலியுறுத்தித்தான் பல்வேறு சங்கங்கள் போராடி வருகிறோம். தற்போது ஏப்ரல் மாதம் உயர்த்தப்பட உள்ள சுங்கச்சாவடி கட்டண முடிவை நிறுத்தி வைக்க வேண்டும். ஏற்கெனவே 4.5 லட்சம் லாரிகளில் 1 லட்சம் லாரிகள் தவணைக் கட்ட முடியாமல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 50 ஆயிரம் லாரிகள் காயலான் கடைக்குச் சென்றுவிட்டன. தற்போது சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டாலும் கூட வாடகை கட்டணம் உயர்த்த முடியாது. மக்களால் அந்த வாடகையைக் கொடுக்க முடியாது. லாரி தொழிலுக்கு மூடு விழா தான் நடத்த வேண்டும்.
இதனால் லாரி தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் எலக்ட்ரீசியன், பெயின்டர், பாடி கட்டுவோர், மெக்கானிக், உரிமையாளர்கள், ஒட்டுநர்கள், கிளீனர்கள் என 50 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். எனவே, சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ஏப்ரல் 1ஆம் தேதி தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது” என்று கூறியுள்ளார்.
ராஜ்
உலக தண்ணீர் தினத்தில் கிராம சபை கூட்டம்!
4 வருடமாக நடந்த திருட்டு… ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 100 சவரன் நகைகள் மீட்பு!
