மன்சூர் அலிகான் பேச்சுக்கு நடிகை த்ரிஷா தானே வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. hc judge question to Mansoor Ali Khan
நடிகர் மன்சூர் அலிகான் கடந்த மாதம் அளித்த பேட்டியில் நடிகை த்ரிஷா பற்றி தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியது.
மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த த்ரிஷா,
“இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர். இனி எனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன்” என்று கூறியிருந்தார்.
மன்சூர் அலிகான் பேச்சுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உட்பட திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.
சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மன்சூர் அலிகான், “த்ரிஷா என்னை மன்னித்துவிடு’ என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக நடிகை த்ரிஷா, தேசிய மகளிர் ஆணையர் உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா 1 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை இன்று (டிசம்பர் 11) விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், இந்த விவகாரத்தில் நடிகை த்ரிஷா தானே வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும். எங்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா என மன்சூர் அலிகான் தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, நடிகராக இருப்பவர்களை இளைஞர்கள் பலர் ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில், பொதுவெளியில் இதுபோன்று அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா?.
மன்சூர் அலிகான் இதுபோன்று தொடர்ச்சியாக சர்ச்சையான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவர் ஊடகங்களை எதற்காக சந்திக்கிறார்? அவருக்கு வேறு வேலை இல்லையா?
தான் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்லும் மன்சூர் அலிகான், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்கா மன்னிப்பு கேட்டார்?” என கேள்விகளை எழுப்பினார் நீதிபதி.
இதற்கு மன்சூர் அலிகான் தரப்பில், “நான் பேசிய முழு வீடியோவையும் தாக்கல் செய்ய உள்ளதாகவும், என்னை பற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதை த்ரிஷா நீக்க வேண்டும்” என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது த்ரிஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.வி.பாபு, “மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் முடிந்துவிட்டது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நாங்களே அமைதியாக இருக்கும் நிலையில் எதற்காக மன்சூர் அலிகான் வழக்குத் தொடர்ந்தார் என்று தெரியவில்லை” என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் தொடர்ந்து மன்சூர் அலிகான் மனு குறித்து, த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை டிசம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பிறந்த குழந்தையின் உடல் அட்டைப்பெட்டியில்! மார்ச்சுவரி ஊழியர் சஸ்பெண்ட்!
எம்.பி. பதவி பறிப்பு : சட்ட போராட்டத்தைத் தொடங்கிய மஹூவா மொய்த்ரா
hc judge question to Mansoor Ali Khan