திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் 20 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு முடிவு செய்துள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு அமைச்சர் கே.என் நேருவின் தம்பி ராமஜெயம், மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.
முதலில் இந்த கொலை தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிறகு12 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
ஆனாலும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இலலை. பின்னர் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகும் குற்றவாளிகள் சிக்காததால் சிபிஐ வசம் மாற்றப்பட்டது.

ராமஜெயம் கொலை வழக்கில் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை அடையாளம் காட்டுபவர்களுக்கு ரூ. 50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று கூட அறிவிக்கப்பட்டது.
ஆனால் கொலையாளிகள் குறித்து எந்த துப்பும் கிடைக்காததால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது.
தற்போது இந்த வழக்கை நீதிமன்ற உத்தரவுப்படி எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான டி.எஸ்.பி மதன் மற்றும் ஆய்வாளர்கள் 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய் குழு விசாரணை செய்து வருகிறது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யார், என்ன காரணத்திற்காக கொலை நடந்தது என்பது குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை.
இந்த நிலையில், மயிலாப்பூர் எம்.எல்.ஏ கொலை வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் கணேசன் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணை மேற்கொண்டனர்.

2000ம் ஆண்டு மயிலாப்பூர் எம்.எல்.ஏ. பாலன் நடைபயிற்சி மேற்கொண்டபோது 16 பேர் கொண்ட கும்பலால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.
ராமஜெயமும் அதேபோல் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது கடத்தி கொல்லப்பட்டதால் முன்னாள் எம்.எல்.ஏ. பாலன் கொலை வழக்கில் தொடர்புடைய கணேசன் மற்றும் செந்தில் ஆகிய இருவரையும் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலன் விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் முக்கியமான 20 ரவுடிகளிடம் உண்மை அறியும் சோதனை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு முடிவு செய்துள்ளது. நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்று அதன்பிறகு இந்த சோதனையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக நடைபெறும் விசாரணையை கண்காணிப்பவரான சி.பி.சி.ஐ.டி. டிஜிபி ஷகீல் அக்தர் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற இருப்பதாக தெரிகிறது.
சுமார் 10 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் போலீஸ் திணறி வருகிறது.
கலை.ரா