திருச்சி என்.ஐ.டி மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர்கள் போராட்டம் வாபஸ்… நடந்தது என்ன ?
திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவி நேற்று (ஆகஸ்ட் 29)பாலியல் தொல்லைக்கு ஆளானதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் பேசி, போராட்டத்தை முடித்து வைத்தார் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார்.
திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியின் பெண்கள் விடுதியில் இணையத்தள வசதியில் குறைபாடு இருந்துள்ளது. அதனைச் சரி செய்ய வந்த ஒப்பந்த ஊழியர் அங்குள்ள ஒரு மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனை அவர் கல்லூரி விடுதி காப்பாளரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் விடுதி காப்பாளர் அந்த ஒப்பந்த ஊழியரைக் கண்டிக்காமல், புகார் அளித்த மாணவியின் உடையைக் குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார்.
இதனால் விடுதி காப்பாளர் தங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கல்லூரியில் சில இடங்களில் வேலை செய்யாமல் இருக்கும் சிசிடிவி கேமிராக்களையும் சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் மாணவர்கள் முன்வைத்தனர்.
இதனைக் கேள்விப்பட்டு இன்று அங்கு வந்த திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
அதன்பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அவர் “விடுதி காப்பாளர் தான் செய்த தவறுக்கு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிடுவதாகக் கூறியுள்ளார். மேலும் மாணவர்களின் மற்ற கோரிக்கைகளும் தீர்த்து வைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றுவிட்டார்கள்” என்று கூறினார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பங்குச் சந்தையில் புதிய உச்சம் : இன்று கவனம் செலுத்தும் நிறுவனங்கள்!
எத்தனை கோடி கொடுத்தா என்ன? பான்மசாலா விளம்பரம் வேண்டாம் : நடிகர் மாதவன் முடிவின் பின்னணி!
தங்கம் விலை சரிவு…நகை பிரியர்கள் மகிழ்ச்சி!