திருச்சி மாவட்டம் கொள்ளிடத்தில் பெருக்கெடுத்து ஓடும் நீரால் பழைய பாலத்தின் 17வது தூண் இன்று (ஆகஸ்ட் 9) இடிந்து விழுந்தது.
கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, மேட்டூரில் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தவிர, தமிழகத்தில் பெய்துவரும் பருவ மழையாலும் காவிரிக் கரையோர ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து, கொள்ளிடத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொள்ளிடம் ஆற்றில் ஆகஸ்ட் 6ம் தேதி ஆய்வு மேற்கொண்ட நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, “கொள்ளிடம் பழைய பாலத்தை இடித்து அகற்ற ரூ. 3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்தப் பாலத்துக்கு மாற்றாக ஏற்கெனவே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இடிந்த பாலத்தை விரைந்து அகற்ற ஒப்பந்தம் கோரப்படும். அதற்குள் தானாக விழுந்தால் நல்லதுதான். இருப்பினும், அசம்பாவிதம் தவிா்க்க தற்போது அப் பகுதியைத் தொடா்ந்து கண்காணிக்கிறோம்” என்றார்.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 9) கொள்ளிடம் பழைய பாலத்தின் 17வது தூண் இடிந்து விழுந்தது. திருச்சி மாநகரின் அழகிய அடையாளங்களில் ஒன்று கொள்ளிடம் பழைய பாலம்.
இந்தப் பாலம் திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் மற்றும் திருவானைக்காவல் ஆகியவற்றை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 1928ல், 12.5 மீ. அகலம், 792 மீ. நீளத்தில் 24 தூண்களுடன் பாலம் கட்டப்பட்டது. ஒரு நூற்றாண்டை நெருங்கும் இப்பாலம் வலுவிழந்ததையடுத்து 2007 ஆம் ஆண்டே போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டது.

இதையடுத்து 88 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பாலம் 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக திறந்துவைக்கப்பட்டது.
இதனால் கொள்ளிடம் பழைய பாலத்தில் போக்குவரத்துக்கும் பொது மக்கள் பார்வையிடவும் தடைவிதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், 23 தூண்கள் கொண்ட பழைய பாலத்தில் 18, 21, 22 ஆகிய தூண்கள் இடிந்து விழுந்தன.
தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகளவு செல்லும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 9) கொள்ளிடம் பழைய பாலத்தின் 17வது தூண் இடிந்து விழுந்தது.
கொள்ளிடம் பழைய பாலத்தில் 17வது தூண் இடிந்து விழுந்ததை இன்று (ஆகஸ்ட் 9) நேரில் சென்று பார்வையிட்ட திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், “கொள்ளிடத்தில் நீர்வரத்து குறைந்தபின்னர் பழைய பாலத்தை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்