திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூன் 11) முதல் பயன்பாட்டிற்கு வந்ததுள்ளது. புதிய முனையத்திற்கு வருகை தந்த முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட் செய்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்க ரூ.1,112 கோடியில் திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தை 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
3 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜனவரி 2ஆம் தேதி, திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி நேரில் வந்து திறந்து வைத்தார்.
ஆனால், புதிய முனையத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடைபெற்றதால், இதில் விமான போக்குவரத்து ஜூன் 11ஆம் தேதி முதல் தொடங்கும் என திருச்சி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணி தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே திருச்சி விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் முனையம் இன்று காலை 5 மணிக்கு பின் பன்னாட்டு விமான நிலையமாக செயல்படுவது நிறுத்தப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டு, அதன் பயன்பாடு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் விமான நிலைய இயக்குநர் தெரிவித்திருந்தார்.
புதிய முனையத்தில் சிறப்புகள்
75 ஆயிரம் மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தில் ஆண்டுக்கு 4.5 மில்லியன் பயணிகளை கையாள முடியும்.
ஒரே நேரத்தில் 10 விமானங்களில் இருந்து வரும் அதாவது 3,480 பயணிகளை கையாள முடியும். இங்கு 104 இமிகிரேஷன் கவுண்டர்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
புதிய முனையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 12 விமானங்கள் தரையிறங்கி, புறப்பட்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒரு நாளில் குறைந்தபட்சம் 240 விமானங்கள் வந்து செல்லும் வகையில் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதிய முனையத்தில் தற்போது 5 ஏரோ பிரிட்ஜகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட்
இந்நிலையில் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று காலை முதல் பயன்பாட்டிற்கு வந்தது. அதில், சென்னையில் இருந்து வந்த இண்டிகோ விமானம் முதல் விமானமாக தரையிறங்கியது.
அப்போது, அந்த விமானத்தின் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பயணிகளுக்கு வரவேற்பு
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் மூலம் பயணம் மேற்கொள்ள வந்த பயணிகளுக்கு விமான நிலைய ஊழியர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டி20 உலகக்கோப்பை: ’கனடாவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான்’ – வெல்லுமா?
சோனியா, மம்தா வரிசையில் கனிமொழி: திமுக நாடாளுமன்ற நிர்வாகிகள் தேர்வு பின்னணி!