திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள அனைத்து நுழைவாயில்களையும் இழுத்து மூடி உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என்று திருச்சி சில்லறை வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Trichy Market Retailers warning
திருச்சியின் முக்கிய இடமான காந்தி மார்க்கெட் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த நிலையில் நகரின் மையப்பகுதியில் இருந்ததால் நெரிசலுக்கு உள்ளாகி வந்தது. இதனால் இந்த சந்தையை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டமிடப்பட்டது. ஆனால், “140 வருடங்களாக திருச்சி மாநகர் பகுதியில் ஒரே இடத்தில் இருந்து வரும் காந்தி மார்க்கெட்டை மாற்ற வேண்டாம். சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். காந்தி மார்க்கெட் பகுதி மட்டும்தான் பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஏற்ற வசதியாக இருக்கும். எனவே, காந்தி மார்க்கெட்டை மாநகர் பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம்” என வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், சில்லறை வியாபாரிகள் பழைய இடத்திலேயே வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள் தற்போது மொத்த வியாபாரிகளால் பாதிக்கப்பட்டு வருவதால், திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம், திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சில்லறை வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சி காந்தி மார்க்கெட்டில் அதன் தலைவர்கள் எம்.கே.கமலக்கண்ணன், எம்.கே.ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சில்லறை வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சில்லறை வியாபாரிகள் சங்க தலைவர்கள் எம்.கே கமலக்கண்ணன், எம்.கே ஜெய்சங்கர் ஆகியோர் பேசினர். அப்போது, “சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு மொத்த வியாபாரிகளை உடனடியாக கள்ளிக்குடி மார்க்கெட்டுக்கு அனுப்ப வேண்டும். எங்களது கோரிக்கையை பரிசீலித்து மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் அனைத்து சில்லறை வியாபாரிகளும் ஒன்று சேர்ந்து திருச்சி காந்தி மார்க்கெட்டில் கறுப்பு கொடி ஏற்றி வியாபாரம் செய்வோம்.
மேலும், காந்தி மார்க்கெட்டில் உள்ள அனைத்து நுழைவாயில்களையும் இழுத்து மூடி உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம். மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரத்தை நிறுத்தாவிட்டால் சரக்கு வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். மார்க்கெட் உள்ளே செல்லும் சரக்கு வாகனங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதாவது 2 மணி நேரத்திற்குள் வெளியே செல்ல வேண்டும். வெளியே செல்லவில்லை என்றால் சில்லறை வியாபாரிகள் தஞ்சை ரோட்டை மறித்து தரைக்கடைகளை போட்டு வியாபாரம் செய்து போராட்டம் நடத்துவோம்.
எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் உடனடியாக பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.