மணல் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை தாக்கிய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து மக்கள் குறைதீர் கூட்டத்தில் இன்று (மே 29) பங்கேற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் செம்மண்ணை கடத்தி வெளியே விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஆர்.ஐ பிரபாகரனுக்கு தகவல் கிடைத்தது.
இரவு நேரங்களில் தொடர்ந்து மணலை அள்ளி வெளியே விற்பனை செய்து வந்த நிலையில் இதனைத் தடுப்பதற்காக பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது, நரசிங்கபுரம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் மற்றும் ஜேசிபி ஓனர் உள்ளிட்டோர் மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் திட்டி ஆர்.ஐ பிரபாகரனை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் வருவாய் ஆய்வாளரின் மண்டை உடைந்தது.
இதுகுறித்து தகவலறிந்த நரசிங்கபுரம் ஊராட்சியின் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆர்.ஐ பிரபாகரனை மீட்டு ஆம்புலன்ஸ் வாயிலாக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு சிகிச்சைப் பெற்ற பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன், ஜேசிபி ஓட்டுனர் மணிகிருஷ்ணன், தனபால் உள்ளிட்ட 4 பேர் மீது ஆர்.ஐ பிரபாகரன் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் 4 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கருப்பு பேட்ச் அணிந்து கலந்துகொண்டனர்.
மணல் கட்த்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை தாக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட நான்கு பேருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ச் அணிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: ஜிஎஸ்எல்வி – எப் 12 !
டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ருதுராஜூக்கு பதிலாக ஜெய்ஷ்வால்