இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும், யூடியுபிலும் Inba’s Track என்னும் பெயரில் தொடர்ந்து ஆபாச வீடியோக்களை பதிவு செய்து வந்த, யூடியுபர் மீது திருச்சி சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Inba’s Track என்னும் பெயரில் யூடியுபிலும், இன்ஸ்டாகிராமிலும் மோனோ ஆக்டிங் வீடியோக்களை பதிவிட்டு வந்த இளைஞர் ஒருவர், கடந்த சில மாதங்களாக எக்ஸ் தளத்திலும் தன்னுடைய வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
அவரின் வீடியோக்கள் ஒரு கட்டத்தில் எல்லை மீறி பெண்களை, குறிப்பாக பள்ளி மாணவிகளை ஆபாசமாக சித்தரிக்க ஆரம்பித்தன. இதைப்பார்த்த பலரும் இதுபோல வீடியோக்களை இங்கு பதிவிடாதீர்கள் என அவருக்கு அறிவுரை வழங்கினர். பதிலுக்கு அந்த இளைஞர் அறிவுரை சொன்னவர்களையே கிண்டலடித்து வீடியோ வெளியிட்டார்.
சொன்னா கேக்கணும்.. 😂😂
இப்டி உள்ள போ போறியே இன்பாண்ணா … 😌 https://t.co/LR4K3b6mS7— Sonia Vimal (@NameisSoni) December 4, 2023
இந்த நிலையில் ஆசிரியர் – மாணவி என்ற தலைப்பில் ஆபாசமான மோனோ ஆக்டிங் வீடியோக்களை தொடர்ச்சியாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வந்த இவர், நேற்றும் (டிசம்பர் 4) அதுபோல வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
இந்த வீடியோவை பார்த்த வலைதளவாசி ஒருவர் உடனடியாக இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ், சைபர்கிரைம் மற்றும் வருண் குமார் ஐபிஎஸ்-க்கு டேக் செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொண்டார்.
இதைப்பார்த்த திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் ஐபிஎஸ், ”இவரின் தகவல்களை கொடுங்கள்” என எக்ஸ் தளத்திலேயே பதிலளிக்க, பலரும் இந்த இளைஞர் குறித்து தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவிட ஆரம்பித்தனர். இதைப்பார்த்த அந்த இளைஞர் உடனடியாக தன்னுடைய வீடியோவை டெலிட் செய்து விட்டு தன்னுடைய எக்ஸ் ஐடிக்கும் பூட்டு போட்டு விட்டார்.
இந்த நிலையில் வீடியோக்கள் பதிவிட்ட இளைஞருக்கு எதிராக குற்ற எண் 2/23, U/s 292(a), 294(b), 509 IPC & 67, 67-A, 67-B of IT Act. & 4 r/w 6 of Indecent Representation of Women (Prohibition Act.) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதாக திருச்சி சைபர்கிரைம் போலீசார் செய்தி வெளியிட்டுள்ளனர்.
அதில், ”Inba’s Track என்னும் பெயரில் இவரின் வீடியோக்கள் மற்றும் மோனோ ஆக்டிங்குகள் மிகவும் அருவறுக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும் இருக்கின்றன. இதை பார்க்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் இடையே பாலியல் தொடர்பான எண்ணங்கள் ஏற்பட்டு குற்ற செயல்களில் ஏற்பட வாய்ப்புள்ளது.
குறிப்பாக பெண்களின் நாகரீகத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார். எனவே மேற்படி சமூக வலைதளத்தை பயன்படுத்திய நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என தெரிவித்து உள்ளனர்.
இதற்கிடையில் மேற்கண்ட இளைஞர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் என்றும் தற்போது சென்னை பெருங்களத்தூரில் வசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
வேளச்சேரியை காலி செய்யும் வெளியூர்வாசிகள்!
30 சதவீதம் பேருந்துகள் இயங்குகின்றன: தலைமைச் செயலாளர்