சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் கஸ்டடி: திருச்சி நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம்

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கரை ஒரு நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க திருச்சி மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயப்பிரதா இன்று (மே 16) உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டியில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியிருந்தார். இதுதொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார், சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தொடர்ந்து தேனியில் சவுக்கு சங்கர் காரில் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக வழக்கு, பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிச்சந்தர், தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலெட்சுமி ஆகியோர் தொடர்ந்த வழக்கு என 7 வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

இந்தநிலையில், பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை திருச்சி பெண் போலீசார் கோவை மத்திய சிறையில் இருந்து அழைத்து சென்று திருச்சி கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில்  நேற்று (மே 15)  ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதியிடம், பாதுகாப்பிற்கு வந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் பெண் போலீசார் தன் கையை முறுக்கி தாக்கியதாக சவுக்கு சங்கர் புகார் அளித்தார். இதனை மறுத்த போலீசார், தங்கள் விரல் கூட சவுக்கு சங்கர் மீது படவில்லை என்று நீதிபதியிடம் தெரிவித்தனர்.

சவுக்கு சங்கரின் வாக்கு மூலத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதி, அவரை மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.

தொடர்ந்து திருச்சி போலீசார் தரப்பில் சவுக்கு சங்கரை 7 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்த நீதிபதி ஜெயப்பிரதா, சவுக்கு சங்கரை ஒரு நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் லால்குடி கிளை சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.

தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சவுக்கு சங்கருக்கு போலீஸ் கஸ்டடி வழங்கினால் அவர் போலீசாரால் தாக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே போலீஸ் கஸ்டடிக்கு அனுமதிக்க கூடாது” என்ற வாதத்தை முன்வைத்தார்.

காவல்துறை தரப்பில், “வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கரிடம் விசாரிக்க வேண்டும். அதனால் கஸ்டடிக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் கஸ்டடி அளித்தும், நாளை மாலை 4 மணிக்கு அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி ஜெயப்பிரதா உத்தரவிட்டார்.

இந்தநிலையில், தேனியில் சவுக்கு சங்கர் காரில் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் பதிவு செய்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மே 20-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

35 நாட்களில் சிம்பொனி: ரசிகர்களுக்கு ராஜா சொன்ன குட் நியூஸ்!

விவோவின் பிளாக்பஸ்டர் 5ஜி: அப்படி என்னய்யா போன் அது ?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *