அமெரிக்காவை அசத்திய தமிழக இருளர்களுக்கு பத்மஸ்ரீ விருது: யார் இவர்கள்?

தமிழகம்

தமிழ்நாடு இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாசி சடையன் மற்றும் வடிவேல் இருவரது புகைப்படம் தான் நேற்று இரவு முதல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்கா அழைத்த தமிழக இருளர்கள்!

பொதுவாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஆன்சைட்டுக்குத்தான் அழைக்கப்படுவார்கள். ஆனால் இவர்கள் பாம்பு பிடிக்க அழைக்கப்பட்டனர். குறிப்பாக ட்ரம்ப் அதிபராக இருந்த காலக்கட்டத்தில்.

அமெரிக்கா அதிபராக இருந்த ட்ரம்ப் அமெரிக்கர்களுக்குத்தான் முன்னுரிமை என கொள்கையில் இருந்த காலம் அது.

விசாக்கள் ரத்து செய்யப்பட்டதால் ஐடி வேலைகளில் இருந்தவர்கள் ஆன்சைட்டுக்கு செல்ல முடியாமல் தவித்த காலம் அது. இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் இருவரையும் அமெரிக்காவே தனது சொந்த செலவில் அழைத்தது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணம் பைத்தான் எனப்படும் அதிக மலைப்பாம்புகள் வாழும் பகுதியாகும். 2017ல் ஃப்ளோரிடா மக்களிடையே பைத்தான்கள் அச்சத்தை ஏற்படுத்தியது. மான், முயல்கள் உள்ளிட்ட விலங்குகள் எல்லாம் பைத்தான்களால் குறையத் தொடங்கின.

அப்போது அமெரிக்காவின் பாம்பு பிடி வல்லுநர்களைக் கொண்டு பைத்தான்கள் பிடிக்கப்பட்டன. ஆனால் அவற்றின் தொல்லை அதிகரிக்கவே, உலகில் எட்டுத்திக்கும் இருக்கும் பாம்புபிடி வீரர்களைக் கண்டறிய ப்ளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் தனித் திட்டம் வகுத்துப் பயணித்தது.

ப்ளோரிடாவில் பிடிபட்ட முதல் மலைப்பாம்புடன் மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால்

அப்போதுதான் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் இருளர் இனத்தைச் சேர்ந்த மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் இருவரையும் கண்டுபிடித்து அழைத்துச் சென்றது.

இவர்களுக்கு மொழி புரியும் வகையில் இரு மொழி பெயர்ப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்குமான செலவுக்காக 68,888 டாலர்கள் ஒதுக்கப்பட்டன. இந்திய மதிப்பில் ஏறத்தாழ 56 லட்சம் ரூபாய்.

1000 பேருக்கு இணையாக செயல்பட்ட இருவர்

அமெரிக்க சென்ற இவர்கள் ஃப்ளோரிடா மலைப்பாம்பு நிபுணர்களுக்குக் கூட கடினமாக இருக்கும் கண்காணிப்பு நுட்பங்களை அறிந்து பைத்தான்களை பிடிக்கத் தொடங்கினர்.

2016ஆம் ஆண்டு, அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்திய பர்மிய வகை மலைப்பாம்புகளைப் பிடிக்க ஒரு மாதம் முழுதும் 1,000 பேர் வேட்டையில் ஈடுபட்டனர். ஒரு மாத முடிவில் அவர்கள் பிடித்த பாம்புகளின் எண்ணிக்கை 106.

ஆனால் தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட மாசி சடையன், வடிவேலு இருவர் மட்டும் ஜனவரி 7 2017 தொடங்கி 4 வாரங்களில், 16 அடி நீளமுள்ள பெண் மலைப்பாம்பு உட்பட 27 மலைப்பாம்புகளைப் பிடித்தனர். இரண்டு மாத காலம் வரை அங்கேயே தங்கியிருந்து 33 பர்மிய ரக மலைப்பாம்புகளைப் பிடித்துக் கொடுத்து விட்டு வந்தனர். இதில் ஒரு பாம்பின் எடை மட்டும் 75 கிலோ.

இருளர்களிடம் கற்றுக்கொண்ட ஆராய்ச்சியாளர்கள்!

இருவரது செயல்பாடுகள் குறித்து மலைப்பாம்புகளை ஆராயும் ஆராய்ச்சியாளர்களின் குழுவின் தலைவரான ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தின் உயிரியலாளர் ஃபிராங்க் மஸோட்டி, “மாசியும், வடிவேலுவும் மற்றவர்கள் செய்ய முடியாததைச் சிறப்பாகச் செய்தனர்.

ஒரு இடத்தில் பாம்பு இருக்கிறதா? இல்லையா? எனக் கண்டறிவதிலும், அவற்றைப் பிடிப்பதிலும் சிறந்து விளங்கினார்கள். பாம்புகளைப் பிடிக்கும் வியூகத்தை இவர்கள் கற்றுத்தர வேண்டும்” எனப் பாராட்டினார்.

tribesmen from chengalpattu best python hunters padmasri award
பாம்பு வழித்தடங்களை ஆய்வு செய்தபோது

அமெரிக்காவின் செய்தி நிறுவனமான மியாமி ஹெரால்டு, “உலகின் சிறந்த பாம்பு பிடிப்பாளர்கள்” என இருவருக்கும் புகழாரம் சூட்டியது.

அமெரிக்கா மட்டுமின்றி தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று பாம்பு பிடித்துள்ளனர் மாசியும், வடிவேலும். ‘ஸ்நேக் மேன் ஆப் இந்தியா’ என அழைக்கப்படும் ராமுலஸ் விட்டேக்கர் உடன் இணைந்து இவர்கள் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் சிறந்த சமூக சேவைக்கான நாட்டின் மிக உயரிய விருதாக கருதப்படும் பத்மஸ்ரீ விருது மாசிக்கும், வடிவேலுவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

tribesmen from chengalpattu best python hunters padmasri award
பாம்பை தேடும் மாசி சடையன்

இதுகுறித்து செங்கல்பட்டு சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த மாசி சடையன் கூறுகையில், “நாங்கள் படித்து வரவில்லை. 16 வயதில் பாம்பு பிடிக்க அப்பா கற்றுக்கொடுத்தார்.

அதைவைத்துத் தான் பிள்ளைகளைக் காப்பாற்றி வருகிறோம். ராம்சார்தான் எங்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றார். ஏரோபிளேனில் வெளிநாட்டுக்கு போகலாம் என்றார்.

அவர் அழைத்தபடி அமெரிக்கா சென்றோம். அங்குப் போன போதுதான் பைத்தான் பிடிக்க வேண்டும் என்றார்கள். பைத்தான் என்றால் என்னவென்று கேட்டோம். பெரிய வகை பாம்பு வந்து பாருங்கள் என்றார்கள்.

அதன்பிறகு சென்று பாம்பை பிடித்து கொடுத்தோம். அதை உயிரியல் பூங்காவில் சென்று விட்டுவிட்டனர். எங்களை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று வந்து வாய்ப்பு மட்டுமின்றி பாம்பு பிடிக்க லைசன்ஸ் வழங்கிய ராம் சாருக்கு நன்றி” என்றார்.

tribesmen from chengalpattu best python hunters padmasri award
16 அடி நீள பாம்புடன் மாசி, வடிவேல் மற்றும் ராமுலஸ் விட்டேக்கர்

மேலும் அவர், “இப்போது நாங்கள் இருவர்தான் வெளிநாடு சென்று கொண்டிருக்கிறோம். பந்து விளையாடுவதற்கு 10, 20 பேர் என குழுவாக அழைத்துச் செல்கிறார்கள். அப்படி எங்களையும் அழைத்துச் செல்ல வேண்டும்.

அரசாங்கம் எங்களுக்கு எதாவது செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும். எங்கள் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். பாம்பு பிடிப்பதற்கும் அரசு உதவி செய்ய வேண்டும்.

அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது எப்படி பாம்பு பிடிக்க வேண்டும் என்று அங்கிருந்தவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தோம். அதை அவர்களும் கற்றுக்கொண்டனர்” என தெரிவித்தார்

tribesmen from chengalpattu best python hunters padmasri award
வடிவேல் கோபால், ப்ளோரிடாவில் 13 அடி மலைப்பாம்புடன் (நன்றி – ஜானகி லெனின்)

வடிவேல் கூறுகையில், “நாங்கள் படிக்காதவர்கள். கணக்கு தெரியாது. எத்தனை பாம்புகள் பிடித்தோம் என்று கணக்கில்லை. கட்டுவிரியன், நல்ல பாம்பு, கண்ணாடி விரியன் சுருட்டை போன்ற விஷ பாம்புகளைப் பிடித்து வருகிறோம். பத்மஸ்ரீ விருது கிடைத்தது மகிழ்ச்சி. பாம்பு தீண்டினால் விஷம் ஏறாமல் இருக்க பச்சிலை மருந்தை கையில் வைத்திருப்போம்” என்றார்.

பாம்பு பிடிப்பவர்களுக்கு பத்மஸ்ரீ விருது 2023 அறிவிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் இருளர் சமூகத்தினர் முன்னேற அரசு எதாவது செய்ய வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கையாக உள்ளது.

பிரியா

நடிகர் மனோபாலாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை!

இங்கிலாந்தில் பட்டப்படிப்பு: இந்திய மாணவர்களுக்கு சிக்கல்?

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *