‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் வந்தது போன்று பொய் திருட்டு வழக்குகளைப் போட்டு போலீஸார் பழங்குடி இருளர்களைச் சித்ரவதை செய்கின்றனர். தமிழக அரசு இதைக் கவனிக்கவில்லையென்றால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலம், காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் இரு சிறுவர்கள் உட்பட ஏழு பழங்குடி சமூகத்தினரை சித்ரவதை செய்து, பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்திருப்பதாகவும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில், இருளர் பழங்குடி பாதுகாப்புச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி,
“புதுச்சேரி – காட்டேரிக்குப்பம் காவல்துறையைச் சேர்ந்த சரண்யா தலைமையிலான போலீஸார், தமிழக எல்லைக்குள் இருக்கக்கூடிய கலிங்கமலைப் பகுதிக்கு கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி இரவு வந்திருக்கின்றனர். அங்கு இருக்கும் ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வந்த பழங்குடிகளை அன்றைய தினம் பிடித்துச் சென்றிருக்கிறார்கள். பின்னர் 26ஆம் தேதியும் சிலரைப் பிடித்துச் சென்றிருக்கின்றனர். இவ்வாறாக ஒன்பது பேரைப் பிடித்துச் சென்று காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் வைத்து, கடுமையான சித்ரவதை செய்திருக்கின்றனர்.
புதுச்சேரி ஐ.ஏ.எஸ் அதிகாரியை நாங்கள் தொடர்புகொண்டு பேசியதையடுத்து, இரண்டு பேரை மட்டும் விட்டுவிட்டார்கள். மீதி ஏழு பேரையும் 28ஆம் தேதி புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். ஆனால், அதில் இரண்டு சிறுவர்கள் இருந்தனர். ‘அவர்களை ரிமாண்ட் செய்ய மாட்டேன்’ என நீதிபதி சொன்னதும், மறுதினம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். கடந்த 7ஆம் தேதிதான் அந்த இரு சிறுவர்களையும் பிணையில் வெளியில் அழைத்து வந்திருக்கிறோம்.
இதில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால்… புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின், காட்டேரிக்குப்பம், மங்களம், வில்லியனூர் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகளையும்; மயிலம் போலீஸார் இரண்டு திருட்டு வழக்குகளையும் அவர்கள் மீது போட்டிருக்கின்றனர். இன்னும் பல வழக்குகளை அவர்கள் மீது போடுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
மேலும், புதுச்சேரி போலீஸ் தமிழக எல்லைப் பகுதிக்குள் வந்து இவ்வாறு பழங்குடிகளைப் பிடித்துச் சென்றது தொடர்பாக, கண்டமங்கலம் காவல் நிலையத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி மாலையே புகார் அளித்துவிட்டோம். ஆனால், இதுவரை அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
சிறுவர்கள் என்றும் பாராமல் கண்ணில் மிளகாய் வைத்து கடுமையான சித்ரவதை செய்திருக்கிறார்கள். இதே மயிலம் போலீஸ்தான் கடந்த வருடம் மார்ச் 1ஆம் தேதி அன்று, சித்தலிங்கமடத்தைச் சேர்ந்த பழங்குடிகள் மூன்று பேரைப் பிடித்து வந்து சித்ரவதை செய்து, 10 திருட்டு வழக்குகளைப் போட்டார்கள். அதற்குக் கண்டன மாநாடுகள் நடத்தினோம். ஆனால், இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக அரசு பழங்குடி மக்களுக்கு பட்டா கொடுக்கிறது, சாதிச்சான்றிதழ் தருகிறது. அதற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
‘ஜெய்பீம்’ திரைப்படம் வந்ததே இது போன்ற பொய் திருட்டு வழக்குகளைப் போட்டு சித்ரவதை செய்வதைக் கண்டித்துதான். ஆனாலும், இதுவரையிலும் எந்த நடவடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை. எனவே, இந்தப் போராட்டங்களை நாங்கள் தொடர்ந்து முன்னெடுக்கிறோம். ஆதாரபூர்வமான புகார்களை அனுப்பியிருக்கிறோம். இதில் நாங்கள் சி.பி.ஐ விசாரணை கேட்கிறோம். தமிழக அரசு இதைக் கவனிக்கவில்லையென்றால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை நிச்சயம் புறக்கணிப்போம்.
இது மட்டுமின்றி 1996-லிருந்து இதுவரை 50-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் தொடர்ந்து இதுபோன்ற சித்ரவதைகளுக்கு ஆளாகி இருக்கின்றனர். அது குறித்த புகார்களையும் அனுப்பியிருக்கிறோம். நடவடிக்கை இல்லையென்றால், நாடாளுமன்றத் தேர்தலை நிச்சயம் புறக்கணிப்போம்” என்று கூறியுள்ளார்.
ராஜ்
”என்னைப் பற்றி தவறான செய்தியை வெளியிடாதீர்கள்”: பவர் ஸ்டார் சீனிவாசன்
கிச்சன் கீர்த்தனா: கேரட் மில்க் ஷேக்!
