“சிதம்பரம் நம்மக்கிட்ட காடு இருந்தா எடுத்துக்குவானுங்க… நிலம் இருந்தா புடுங்கிக்குவானுங்க… ஆனா படிப்ப மட்டும் நம்மக்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது சிதம்பரம்” அசுரன் படத்தில் வரும் வசனம் இது.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய மக்களின் கேடயமாக கல்வி மட்டுமே இங்கு உள்ளது. ஒரு தலைமுறையிடம் கல்வியை ஒப்படைத்தால் அந்த தலைமுறை எப்படியும் பிழைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையை விதைப்பது கல்வி.
இன்றைக்கு பெயருக்கு பின்னால் பி.ஏ பட்டம் போட்டுக்கொள்வதெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது என்ற பேச்சுக்கள் எழும் நிலையில் தான், பழங்குடியின சமுதாயத்தில் என்.ஐ.டி பொறியியல் கல்லூரியில் காலடி எடுத்து வைப்பதற்கே 60 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
அப்படி ஒரு தலைமுறையின் கனவை நனவாக்கியிருக்கிறார்கள் அரசு உண்டு உறைவிட பள்ளியில் படித்த திருச்சி இலுப்பூரை சேர்ந்த ரோஹிணியும் சேலம் கரியகோவில் வளவைச் சேர்ந்த சுகன்யாவும்.
யார் இவர்கள்? அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன? தேர்வுக்கு எப்படி தயாரானார்கள்? என்று மின்னம்பலம்.காம் சார்பில் அவர்களிடம் பேசினோம்.
ரோஹிணி நம்மிடம் பேசியபோது, ”அப்பா மதியழகன், அம்மா வசந்தி. இரண்டு பேருமே கேரளாவுல கூலி வேலை பார்க்குறாங்க. ஊர்ல ஏதாவது விசேஷம்னா மட்டும் தான் அப்பா, அம்மா இங்க வருவாங்க. நான் அவங்க ரெண்டு பேரையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன். அண்ணன், அக்கா இரண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சிருச்சு.
அண்ணன் பிளஸ் 2 முடிச்சிட்டு கேட்டரிங் படிச்சான். இப்போ காட்டுல விவசாய வேலைக்கு போய்க்கிட்டு இருக்கான். அக்கா பிளஸ் 2 முடிச்சதுமே கல்யாணம் முடிஞ்சிருச்சு.
எங்க ஊருக்கு ஒரு நாளைக்கு அஞ்சு தடவை தான் பஸ் வரும். இங்க இருந்து டவுனுக்கு பஸ்ல தான் போகணும். எக்ஸாம் எழுதும் போது கூட பஸ்ஸுக்கு ரொம்ப நேரம் காத்து கிடந்து தான் எக்ஸாம் எழுதிட்டு வந்தேன். வீட்ல ரொம்ப கஷ்டம். அண்ணன், அக்கா தான் கல்யாணம் முடிச்சிட்டாங்க. சரி, நம்மளாவது நல்லா படிச்சு வேலைக்கு போகணும்னுதான் ரொம்பவே தீவிரமா படிச்சேன்” என்று வைராக்கியத்துடன் பேசினார் ரோஹிணி.
தொடர்ந்து அவர், “எங்க வீட்டு பக்கத்துலயே பள்ளிக்கூடம் இருக்குது. நான் ஒன்னாவது வகுப்புல இருந்து பிளஸ் டூ வரை அங்க தான் படிச்சேன்.
பத்தாம் வகுப்புல 373 மார்க் எடுத்து, நான் தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தேன். பதினொன்னுல பயோ மேத்ஸ் குரூப் எடுத்தேன். பனிரெண்டாம் வகுப்புல 423 மார்க் எடுத்து ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தேன்.
ஜனவரி மாசம் தான் நீட், ஜேஇஇ, கிளாட் எக்ஸாமுக்கு பிரிபேர் பண்ண சொல்லி, ஸ்கூல்ல இலவசமா கோச்சிங் கொடுத்தாங்க. ஸ்கூல் முடிஞ்ச பிறகும், சனி, ஞாயிறு ஸ்பெஷல் கிளாஸ் எடுத்தாங்க.
ஜெஇஇ மெயின், என்ட்ரென்ஸ் இரண்டு எக்ஸாமுமே எழுதுனேன். மெயின்ஸ் ரொம்பவே ஈஸியா தான் இருந்தது. எப்படியும் பாஸ் ஆகிருவேன்னு நம்பிக்கை இருந்துச்சு.
அதே மாதிரி 73.8 சதவிகிதம் மார்க் வாங்கி பாஸ் ஆகிட்டேன். ஜெஇஇ என்ட்ரன்ஸ் எக்ஸாம்ல பாஸ் பண்ண முடியல. அதுல பாஸ் பண்ணியிருந்தா சென்னை ஐஐடில சீட் கிடைச்சிருக்கும். மிஸ் பண்ணிட்டேன். இப்போம் திருச்சி என்.ஐ.டி-ல சீட் கிடைச்சிருக்கு. நீட் எக்ஸாம் ரொம்பவே கஷ்டமா தான் இருந்துச்சு. அந்த எக்ஸாம்ல நான் பாஸ் ஆகல.
ஜெஇஇ எக்ஸாம்ல பாஸ் ஆகி, என்.ஐ.டி-ல சீட் கிடைச்சதும் உங்கள மாதிரி நல்லா படிக்கணும்னு ஆசையா இருக்குக்கான்னு எங்க ஊர்ல உள்ள தம்பி, பாப்பாங்க சொல்லும் போது ரொம்பவே மகிழ்ச்சியா இருந்துச்சு” என்றார் ரோஹிணி.
பள்ளிக்கு தன் வீட்டில் இருந்து நடந்து செல்லும்போது கூட படித்துக்கொண்டே தான் செல்வேன் என்று கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறார் சேலத்தைச் சேர்ந்த மாணவியான சுகன்யா.
அவர் நம்மிடம், “அப்பா லெட்சுமணன், விவசாய வேலை பார்க்குறாங்க. அம்மா சின்னபொண்ணு, ஆடு மேய்க்குறாங்க. அண்ணன் பிளஸ் டூ முடிச்சிருக்கான்.
எங்க ஊர்ல எப்போதாவது தான் பஸ் வரும். இங்க 40 குடும்பம் இருக்கோம். இன்னும் ஊர்ல முழுசா கரன்ட் வசதி கிடையாது. சில வீடுகள்ள மட்டும் தான் கரன்ட் இருக்கும். தெருவிளக்கு வசதியும் கிடையாது” என்று தான் சந்தித்த பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து பேசிய சுகன்யா, ”எங்க வீட்ல இருந்து மூணு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற கரியக்கோவில்ல தான் ஸ்கூல் இருக்கு. தினமும் நடந்து தான் ஸ்கூலுக்கு போய்ட்டு வருவேன். பத்தாம் வகுப்புல 355 மார்க் எடுத்தேன். டாக்டர் ஆகணும்குற ஆசையில பதினொன்னாம் வகுப்புல மேத்ஸ் -பயாலஜி எடுத்தேன். பன்னிரெண்டாம் வகுப்புல 412 மார்க் எடுத்தேன்.
நீட், ஜேஇஇ எக்ஸாமுக்கு ஸ்கூல்லயே கோச்சிங் கொடுத்தாங்க. நீட் எக்ஸாம் ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. என்னால பாஸ் பண்ண முடியல. 35 மார்க் தான் எடுத்தேன்.
ஒரு மாசம் தான் ஜெஇஇ எக்ஸாமுக்கு பிரிபேர் பண்ணேன். மெயின்ஸ் எக்ஸாம்ல 73.8 சதவிகிதம் எடுத்து பாஸ் பண்ணியிருக்கேன்.
வீட்ல அம்மாவுக்கு வேலை செஞ்சு கொடுத்துட்டு படிப்பேன். எக்ஸாம் நேரத்துல ஸ்கூலுக்கு நடந்து போகும்போதே படிச்சிக்கிட்டு போவேன். வீட்டு கஷ்டத்தை உணர்ந்து சின்சியரா படிச்சேன்.
என்.ஐ.டி-ல சீட் கிடைச்ச உடனே ஊர்ல உள்ள எல்லோரும் ரொம்பவே என்கரேஜ் பண்ணாங்க. நல்லா படி… காலேஜ்ல இங்லீஷ்லாம் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். படிப்ப விட்டுவிட்டு வந்துடக்கூடாதுன்னு அட்வைஸ் பண்ணாங்க” என்று ரொம்பவும் எமோஷனாலாக பேசினார் சுகன்யா.
60 வருடங்களுக்கு பிறகு முதல் தலைமுறையாக பழங்குடியின சமூகத்தில் இருந்து மாணவிகள் சாதித்திருப்பது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம்.
அவர் கூறும்போது, “75-ஆவது சுதந்திரத்தை இந்தியா கொண்டாடிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 14-க்கு நேர் எதிராக, அரசு பள்ளி, அரசு மாதிரி பள்ளி, அரசு தகைசால் பள்ளி இயங்குகிறது.
மாதிரி மற்றும் தகைசால் பள்ளிகள் என்பது அனைத்து வசதிகள் மற்றும் கட்டமைப்பு கொண்ட பள்ளிகள். அரசு பள்ளிகளில் இவற்றை போன்ற வசதி வாய்ப்புகள் கிடையாது. ஆனால், வினாத்தாள் மட்டும் ஒன்றாக இருக்கும்.
சமமான கற்றல் வாய்ப்பை இன்னும் நம் நாட்டில் கொடுக்க முன்வரவில்லை. சவால்களை கூடுதலாக்கிக்கொண்டே போகிறோம். இவ்வளவு சவால்களையும் சந்தித்து பழங்குடியின மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய கொண்டாடக்கூடிய தருணமாக நான் பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.
“எப்படியாவது படிச்சு முன்னுக்கு வந்துறமாட்டோமா” என்ற கனவுகளை சுமந்து செல்லும் மாணவர்களுக்கு ரோஹிணி, சுகன்யாவின் கதைகள் உத்வேகம் அளிக்கக்கூடியதாக உள்ளது. கல்வியின் கதிர்வீச்சு பழங்குடி மாணவிகளின் பட்டொளியாக வீசும் என்றே நம்புவோம்.
–செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மத்திய அரசின் தொழில்நுட்பம் அல்லாத பணிகள்: ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
அவதூறு பேச்சு… சாட்டை துரைமுருகன் விடுவிப்பு!
சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள்… எதற்காக?
பியூட்டி டிப்ஸ்: உங்களுக்கான கண்ணாடி எது?