காரைக்கால் சிறுவன் சிகிச்சை: 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட்!

காரைக்காலில் விஷம் கலந்த குளிர்பானம் குடித்து இறந்த சிறுவனுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதாக 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கோட்டுச்சேரி பாரதி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த பாலமணிகண்டன் படிப்பில் முதல் மாணவனாகவும், விளையாட்டு, கலை நிகழ்ச்சியிலும் சிறந்து விளங்குபவராகவும் இருந்தார்.

இதனால் பொறாமை கொண்ட சக மாணவியின் தாயான சகாயமேரி, பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சிக்காக ஒத்திகையில் இருந்த சிறுவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்ட சிறுவன் பாலமணிகண்டன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கடந்த 3 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு பாலமணிகண்டன் சற்று தெளிவாகவே பேசியிருக்கிறார். ஆனால் நள்ளிரவில் அவர் திடீரென்று மரணமடைந்தார்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததே மரணத்திற்கு காரணம் என்று கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காமராஜர் சாலையில் அவர்கள் மறியலும் செய்தனர். இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த காரைக்கால் மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்து பெற்றோரை சமாதானப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து மாணவனின் உடலை வாங்கி பெற்றோர் அடக்கம் செய்தனர். அதனடிப்படையில் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர், குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முரளி தலைமையில் மருத்துவர்குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி செப்டம்பர் 6 ஆம் தேதி சிறுவனுக்கு சிகிச்சை அளித்த காரைக்கால் மருத்துவமனைக்கு சென்ற மருத்துவர் குழு, என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்று விசாரணை மேற்கொண்டது.

அதன்பிறகு சிகிச்சை விவரங்கள் குறித்து சுகாதாரத் துறை இயக்குநரிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், பால மணிகண்டனுக்கு எந்த வகையான விஷம் கொடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

அவருக்கு வாந்தி, வயிற்று வலிக்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மாணவன் சிகிச்சை விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி, காரைக்காலில் இன்று (செப்டம்பர் 9)முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

காரைக்கால் இந்து முன்னணி, காரைக்கால், திருநள்ளாறு மற்றும் திரு பட்டினம் வியாபாரிகள் சங்கம், ஆட்டோ, மினி டெம்போ சங்கத்தினர், ஓட்டல்கள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் சங்கம்

மற்றும் அனைத்து கட்சியினர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் பல சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்தநிலையில் மாணவனுக்கு சிகிச்சை அளித்ததில் அலட்சியமாக நடந்து கொண்டதாகக் கூறி மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜி ஆகியோரை புதுச்சேரி அரசு பணியிடை நீக்கம் செய்திருக்கிறது.

சுகாதாரத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

கலை.ரா

படிப்பில் போட்டி – மாணவன் கொலை : மருத்துவமனையில் ஆய்வு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts