நீதிமன்ற அறிவுறுத்தலை ஏற்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளன.
ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, பணி நிரந்தரம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நேற்றும் இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
தொழிற்சங்கத்தினரின் போராட்டத்தை எதிர்த்து சென்னை, சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பால் கித்தியோன்(25) என்ற பார்மகாலஜி மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘8 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை சட்டவிரோதம் என்று அறிவித்து போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு இன்று (ஜனவரி 10) தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் ஜே.ரவிந்திரன், தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் விஜய் நாராயண் உள்ளிட்டோர் ஆஜாரானார்கள்.
அப்போது தொழிற்சங்கங்கள் சார்பில், “ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படியை மாற்றியமைக்க வேண்டும் என்பது தொழிற்சங்கங்களின் மிக முக்கியமான கோரிக்கை. ஆனால் மறுசீரமைப்படாமல் இருக்கிறது. இதை மறுசீரமைப்பதற்கான உத்தரவாதத்தை அரசு அளிக்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
அரசு தரப்பில், “தொழிற்சங்கங்களின் கோரிக்கை நியாயமற்றது. ஊழியர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய அரசு அனைத்தையும் செய்கிறது.
பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களின் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளது. இந்த போராட்டத்தை பொறுத்தவரை 7000 போக்குவரத்து தொழிலாளர்களா அல்லது பொதுமக்களா? என்ற நிலை நீடித்து வருகிறது.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும். ஏற்கனவே நிர்ணயித்தப்படி வரும் 19ஆம் தேதி தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்பு பேச்சுவார்த்தை நடைபெறும். அந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அகவிலைப்படி உயர்வு தொடர்பாக விவாதிக்கப்படும். அகவிலைப்படி தொடர்பான வழக்கு வரும் பிப்ரவரி 6ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. எனவே இந்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தொழிற்சங்கங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதை ஏற்காமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இன்று அதிகாரிகளை பணி செய்ய விடாமல் இடையூறு செய்யும் வகையில் மிரட்டல் விடுக்கின்றனர்” என தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள். “பொங்கல் பண்டிகை நெருங்கவுள்ளது. இது மாநிலத்தின் மிகப்பெரிய முக்கியமான பண்டிகை. பொதுநலன் கருதி பொங்கல் பண்டிகையின் போது தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.
வேலைநிறுத்தப் போராட்டத்தால் நகர்புற மக்கள் பாதிக்கப்படவில்லை என்றாலும் கிராமப்புற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் நடத்த உரிமை இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை, பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது. பண்டிகைக் காலத்தில் போராட்டம் நடத்துவது என்பது மக்களை பிணைக் கைதிகளாக வைத்து போராடுவது போல உள்ளது.
அரசும் 19ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. எனவே, பொங்கல் பண்டிகை முடியும் வரை இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஏன் தள்ளிவைக்கக் கூடாது?” என கேள்வி எழுப்பினர்.
“92,000 ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு தற்காலிகமாக ரூ.2,000 வழங்கிவிட்டு, பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், மீதித் தொகையை டெபாசிட் செய்ய முடியுமா?” என அரசு தரப்புக்கும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அரசு தரப்பும், தொழிற்சங்கம் தரப்பும் தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். அரசின் இந்த பிடிவாதமான அணுகுமுறையை பாராட்ட முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், மக்களின் நலனே உச்ச சட்டம் என்றும் கூறினர்.
இதுதொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்தனர்.
அதன்படி பிற்பகல் விசாரணைக்கு வந்தபோது, “அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பொது நலன் கருதி, தொழிலாளர் ஆணையரிடம் சமரசப் பேச்சு வார்த்தை நடக்கும் ஜனவரி 19-ம் தேதி வரை போராட்டத்தை நிறுத்திவைக்கிறோம்” என்று தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதிகள், ”நாளை முதல் போக்குவரத்து பணியாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். இவர்கள் மீது அரசு எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” என்று உத்தரவிட்டனர்.
இன்றைய விசாரணையின் போது , “அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையிலான உறவு என்பது கணவன்-மனைவி போன்றது” என கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் ஜே.ரவிந்திரன் தெரிவித்தார்.
அதற்கு ஒரு தொழிற்சங்கம் தரப்பில், “நாங்கள் தற்போது விவாகரத்து பெற்றுவிட்டோம்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் ஜே.ரவிந்திரன், லிவிங் ரிலேஷன்ஷிப்பில் கூட இருக்கலாம் என பதிலளித்தார்.
இவ்வாறு சுவாரஸ்யமாகவும், பரபரப்பாகவும் நடந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த வழக்கு, தொழிற்சங்கங்களின் பதிலை ஏற்று முடித்துவைக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அசோக் செல்வன், சாந்தனுவின் கிரிக்கெட் மோதல்: ப்ளூ ஸ்டார் ட்ரெய்லர் எப்படி?
முழுமையடையாத ராமர் கோயிலில் குடமுழுக்கு : காங்கிரஸ் நிராகரிப்பு!