ஆட்டோ கட்டணம் உயர்வா? – போக்குவரத்துத் துறை சொல்வது என்ன?

Published On:

| By Selvam

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலித்தால், ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

ஆட்டோ மீட்டர் கட்டணமானது கடந்த 12 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. இதனையடுத்து ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்தநிலையில், பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படும் என்று அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, பிப்ரவரி 1 முதல் குறைந்தபட்ச கட்டணமாக 1.8 கி.மீ-க்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். அடுத்த ஒவ்வொரு கி.மீ-க்கும் கூடுதல் கட்டணமாக ரூ.18 உயர்த்தப்படும்.

5 நிமிடத்திற்கு மேல் காத்திருப்பு கட்டணமாக, நிமிடத்திற்கு ரூ.1.50 வசூலிக்கப்படும். இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பகல் நேர கட்டணத்தை விட 50 சதவிகிதம் அதிகமாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள போக்குவரத்துத் துறை, “ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது. ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவு அரசின் பரிசீலனையில் உள்ளது.

பிப்ரவரி 1 முதல் சில ஆட்டோ சங்கங்கள் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் அளிக்கலாம். அந்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்க எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share