ரயில் விபத்து : நாச வேலையே காரணம்… வழக்கில் மேலும் ஒரு சட்டப்பிரிவு சேர்ப்பு!
கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து கூட்டுக்குழு அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், ரயிலை கவிழ்க்க சதி என்ற மேலும் ஒரு சட்டப்பிரிவை சேர்த்து ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 11-ம் தேதி இரவு நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து பிஹார் மாநிலம் தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி விரைவு ரயில் மோதியது. இதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதுமில்லை.
விபத்து நடந்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் அங்கிருந்த ‘ஸ்விச் பாய்ன்ட்’ போல்ட்கள் கழற்றப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, ரயில் நிலைய அதிகாரி முனிபிரசாத் பாபு அளித்த புகாரின்பேரில் கொருக்குப்பேட்டை போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் 3 டிஎஸ்பி-க்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே விபத்து தொடர்பாக, ரயில்வே தென் மண்டல பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி, பாக்மதி ரயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட், ரயில் நிலைய மேலாளர், கார்டு, ஏ.சி. பெட்டி பணியாளர்கள், பொன்னேரி, கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர்கள் உள்ளிட்ட 30 ரயில்வே அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் ரயில்வே மூத்த அதிகாரிகள் 7 பேர் அடங்கிய குழு, விபத்து நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டு கூட்டு அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது.
அதில், “கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணம் இல்லை. விபத்து நடைபெற்ற இடத்தில் போல்ட்கள், நட்டுகள் கழற்றப்பட்டதால், மெயின் லைனின் இருந்து விலகி லூப் லைனுக்கு சென்று விபத்துக்கு உள்ளானது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மூத்த ரயில்வே அதிகாரி கூறுகையில், “ரயில் விபத்துக்கு நாசவேலை காரணம் என்ற கோணத்தை நிராகரிக்க முடியாது. விசாரணையில் தற்போது அது உறுதியாகியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ஏற்கெனவே காயம் மற்றும் கடுமையான காயம் ஏற்படுத்தும் விதமாக செயல்படுதல், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், கவனக்குறைவான செயலால் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
தற்போது கூட்டுக்குழு அறிக்கையின் அடிப்படையில் 5வதாக ’ரயிலை கவிழ்க்க சதி’ என்ற சட்டப்பிரிவை முதல் தகவல் அறிக்கையில் சேர்த்து ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து ரயில்வே போலீஸார் தரப்பில், ”விபத்து நடைபெற்ற இடத்தில் அதாவது பிரதான பாதையில் இருந்து கிளை பாதைக்கு (லூப் லைன்) மாற்றக்கூடிய பாய்ன்ட்டில் போல்ட்டுகள், நட்டுகள் கழற்றப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் ரயிலை கவிழ்க்க சதி என்ற சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வரும் நிலையில், குற்றாவளிகளை விரைவில் பிடிப்போம்” என தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மீண்டும் மீண்டுமா? : நியூசிலாந்திடம் பட்டத்தை பறிகொடுத்த தென்னாப்பிரிக்கா!
ஏறிக்கொண்டே போகும் தங்கம் விலை… இன்றையே ரேட் எவ்ளோ?