நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சீட் பெல்ட் மற்றும் சீருடை சரியாக அணியவில்லை என்று மூன்று அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் இன்று (மே 24) அபராதம் விதித்தனர்.
கடந்த மே 21-ஆம் தேதி நாகர்கோவில் செட்டிக்குளம் பணிமனையில் திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசு பேருந்தில் பயணித்த காவலர் ஆறுமுகப்பாண்டி, தான் சீருடையில் இருப்பதால் டிக்கெட் எடுக்க முடியாது என்று நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து அரசு பேருந்துகளில் வாரண்ட் இருந்தால் மட்டுமே காவலர்கள் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்று போக்குவரத்துத்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், நாங்குநேரியில் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் சண்முக பாண்டியன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
இந்தநிலையில், நேற்று (மே 23) சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே ஜிஎஸ்டி சாலையில் நோ பார்க்கிங் மற்றும் நிறுத்தம் இல்லாத இடங்களில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்ட 24 பேருந்துகளுக்கு செம்மஞ்சேரி போக்குவரத்து போலீசார் தலா ரூ.1000 அபராதம் விதித்தனர்.
இதேபோல, உளுந்தூர்பேட்டையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 5 அரசு பேருந்துகளுக்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அனுமதி இல்லாத ஒரு வழிப்பாதையில் சென்ற 5 அரசு பேருந்துகளுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அண்ணா தொழிற்சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “போலீசாரும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று சொன்னதால், போக்குவரத்து துறைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் காவல்துறையினர் அபராதம் விதிக்கின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.
காவல்துறை – போக்குவரத்து துறையினர் இடையே நிலவும் மோதல்போக்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சீட் பெல்ட் அணியவில்லை, சீருடை சரியாக அணியவில்லை என்று மூன்று அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா ரூ.500 வள்ளியூர் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
தமிழகம் முழுவதும் காவல்துறை – போக்குவரத்துறை அதிகாரிகள் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்து வருவது விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கேசவ விநாயகத்தை சிபிசிஐடி விசாரிக்க தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்!
ஜூன் 6ல் பள்ளிகள் திறப்பு – மாணவர்களே ஸ்கூல் போக ரெடியா?